மருமகன் பயங்கரவாதி இல்லை என்கிறார் இலங்கை அமைச்சர்

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் அவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக நம்ப முடியாது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் நியாயத்தன்மை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலியாவின் சட்டம் செயற்படுகின்ற முறை சம்பந்தமாக தமது குடும்பத்தின் அனைவரும் மதிப்பளிப்பதாக கூறியுள்ளார்.

தனது மருமகன் மொஹமட் நிசாம்தீன் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் அமைச்சராக இருந்த போதிலும் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினூடாக எவ்வித தலையீடும் செய்யப் போவதில்லை என்றும் அவ்வாறு செய்தால் அது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தமது குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சினை என்றும், இந்தக் கைது சம்பவத்தால் தமது குடும்பம் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த 30 ம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீனுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Leave a Comment