ரஜினி மக்கள் மன்றம் சட்டதிட்ட விதிகள் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் சட்ட திட்ட விதிகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 35 வயதுக்குட்பட்டவரே இளைஞர் அணியில் இருக்க முடியும், மன்றக் கொடியை நிரந்தரமாகப் பயன்படுத்த அனுமதியில்லை என்பன உட்பட பல அதிரடி அறிவிப்புகள் அதில் உள்ளன.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பின் ரஜினியும் கமலும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அதற்கு மாநில நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.

பின்னர் டிச.31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சியின் பெயரையோ, கொள்கையையோ, மற்ற விபரங்களையோ அவர் வெளியிடவில்லை. அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில பொதுச்செயலாளராக ராஜு மகாலிங்கம், தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் தற்போது கட்சியின் அனைத்து அறிவிப்புகள், நீக்கம் சேர்ப்பது உள்ளிட்டவற்றை கடலூர் இளவரசனே செய்து வருகிறார்.

தனது கட்சி தேவைப்பட்டால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என்று ரஜினி அறிவித்தார். கட்சியின் கொள்கை குறித்து கேட்டபோது ஒன்றும் சொல்லாத ரஜினி ஆன்மிக அரசியல் தனது பாதை என்று தெரிவித்தார். அது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இடையில் வேறு படங்களில் நடிக்க மாட்டார் முழு நேர அரசியல்வாதி ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸுக்கு புதுப்படம் ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து முருகதாஸ் படத்திலும் அடுத்து நடிக்க உள்ளார். இதனிடையே ரஜினி மக்கள் மன்றப் பணிகள் சற்று பின்னடைவாக இருந்த நிலையில் மீண்டும் இன்று ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்திற்காக நடைமுறை விதிகளுடன் புத்தகம் ஒன்று உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக கட்சி விதிகள் என்று கூறுவார்கள். அதுபோன்று மன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுவாக அரசியல் கட்சிகளில் இளைஞர் அணியின் நிர்வாகியும், அதில் இருப்பவர்களும் 50 வயதைக் கடந்தவர்கள்கூட இருப்பார்கள், ஆனால் 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணியின் நிர்வாகியாக இருக்க முடியும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

கட்சிக்காரர்கள் என்றால் காரில் கட்சிக்கொடியுடன் கெத்தாக வலம் வருவர். மன்றக்கொடியை நிகழ்ச்சியின்போது மட்டுமே வாகனத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்றும் விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிக அரசியல் தனது அரசியல் என்று கூறினாலும் சாதி மத அமைப்பில் உள்ளவர்கள் மன்றத்தில் உறுப்பினராக முடியாது என்று தடா போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தில் உள்ள முக்கியமான விதிகள்:

1. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்றக் கொடியை நிரந்தமாகப் பொருத்தக்கூடாது.

2. மன்றக் கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

3. இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமுதாயத்தின் சக்தியைத் திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.

4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.

5. சாதி, மதம் சம்பந்தப்பட்ட சங்கங்களிலோஅமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராகச் சேர அனுமதியில்லை.

6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக், பாலித்தீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்கக் கூடாது.

7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

8. ஏற்கெனவே மன்ற நிர்வாகப் பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள்/ பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது.

அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள௠வழங்கப்படும்.

9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

12. தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.

14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.

15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

17. தலைமையகத்தின் எழுத்துப் பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.

18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

19. அந்தந்தப் பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

20. சட்டவிரோதச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

22. சமூக வலையதளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.

23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.

24. சமூக வலைதளங்களில் சொந்தக் கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.

மேற்கண்ட முக்கிய விதிகள் உட்பட மேலும் பல விதிமுறைகள் அந்தப் புத்தகத்தில் உள்ளன.

Related posts

Leave a Comment