மத்தியதரைக் கடலை நோக்கி விரையும் ரஷ்ய போர் கப்பல்கள்

russia1

ரஷ்யா மத்தியதரைக் கடலில் ஒரு டஜன் போர் கப்பல்களை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் ரஷ்யா தலையிட்டது தொடக்கம் ரஷ்யாவின் மிகப்பெரிய கடற்படை குவிப்பாக இது இருப்பதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் நாட்டில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பகுதியான வடக்கு இத்லிப் மாகாணத்தின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே ரஷ்யாவின் படை குவிப்பு இடம்பெறுகிறது.

மறுபுறம் சிரிய அரச படை மீது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகும் வகையில் மத்திய கிழக்கில், அமெரிக்கா படைகளை கட்டியெழுப்பி வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் அட்மிரல் க்ரிகொரோவிச் மற்றும் அட்மிரல் எஸ்ஸன் போர் கப்பல்கள் துருக்கியின் பொபொரஸ் நீரிணை ஊடாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்தியதரைக் கடலை அடைந்திருப்பது ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் படங்கள் காட்டியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் மேலும் இரு கப்பல்கள் கறுங்கடலுடன் மத்தியதரைக் கடலை இணைக்கும் துருக்கி நீரிணை ஊடாக பயணிப்பதையும் காணமுடிந்துள்ளது. இம்மாத ஆரம்பத்திலேயே ரஷ்யாவின் விஷ்னி வொலேசெக் ஏவுகணை வழித்துணை கப்பல் இந்த நீரிணையை கடந்துள்ளது.

சிரிய யுத்தத்தில் தலையிட்டது தொடக்கம் மத்தியதரைக் கடலில் அதிக ரஷ்ய போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென ரஷ்யாவின் இஸ்வெஸ்டியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யாவின் தலையீடு அஸாத் அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் இந்த படை குவிப்பில் பத்து கப்பல்கள் நிலைகொண்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை நீண்ட தூரம் தாக்கும் கலிக் க்ரூஸ் ஏவுகணைகளை கொண்டிருப்பதோடு மேலும் கப்பல்கள் அங்கு சென்ற வண்ணம் இருப்பதாக ரஷ்ய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் மத்தியதரைக் கடலில் நிலைகொண்டுள்ளன.

கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வாசிக்கும் இத்லிப் மாகாணம் மீது படை நடவடிக்கை ஒன்றுக்கு சிரிய அரச படை தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த மாகாணத்தில் பெரும் அளவில் அல் கொய்தா உறுப்பினர்களுடன் பல கிளர்ச்சி குழுக்களும் உள்ளன.

இந்த மாகாணத்தை எல்லையாகக் கொண்ட துருக்கி இத்லிப்பில் ஏற்படும் மோதல் பாரிய மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை உருவாக்கும் என்று அஞ்சுகிறது.

Related posts

Leave a Comment