போர்மூடா அபாய முக்கோணம் விலகியது மர்மத்திரை

maind

இங்கிலாந்து சவுத்காம்ரன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை..

அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள போர் மூடா முக்கோணம் என்ற கடற்பகுதி பற்றி கடந்த நூறு வருடங்களாக நிலவிய மர்மத்தை இங்கிலாந்தில் உள்ள சவுத்காம்ரன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் திரை விலக்கியுள்ளனர்.

நூறாண்டு கால மர்மம் விலகியது..

கடந்த நூறு வருடங்களில் இப்பகுதியால் போன எண்ணற்ற கப்பல்கள் காணாமலே போயிருந்தன. இந்த முக்கோணத்தில் இதுவரை ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளார்கள். இதனால் இது குறித்த மர்மக்கதைகள் மனித குலத்திற்கு என்றுமே பீதி கிளப்பும் கதைகளாகவே இருந்து வந்தள்ளன.

1918ம் ஆண்டு அமெரிக்காவின் கப்பலொன்று இந்த முக்கோணத்தில் மாட்டிக் கொண்டது. திடீரென எழும்பிய அலையில் முழு கப்பலுமே தண்ணீரால் மூடப்பட்டு இரண்டாக உடைந்து 306 பேர் மரணமடைந்தார்கள்.

அமெரிக்காவை கண்டு பிடித்ததாகக் கூறப்படும் கொலம்பஸ்சின் கப்பல் மாலுமிகளும் தொலைவில் பெரும் கடற் குழப்பம் இருந்ததை கண்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஆகவே இந்தச் சிக்கல் ஒரு நூற்றாண்டு சிக்கல் அல்ல மிக நீண்டகாலமாக கண்டறியப்படாத மர்ம முடிச்சாகவே இருந்தும் வந்திருப்பது தெரிகிறது.

காரணத்தை விளக்க மனிதனால் முடியவில்லை. கடலடியில் இருக்கும் பூதத்தை கண்டுபிடிக்கவும் அவனால் முடியவில்லை. இதனால் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் அதிகம் உலாவும் இடமென்று கதைகள் பரவின. இந்த வலயத்தில் காரணம் தெரியாத ஈர்ப்பு வலயம் ஒன்று இருப்பதாகவும் விமானங்கள் கூட இதற்குள் சிக்குப்பட்டு வீழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ber-4

பத்திரிகைகளில் இது பற்றிய கட்டுரைகள் எப்போது வெளியானாலும் அவை திகில் கதைகள் போல முதலாவதாக மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.

இன்றுவரை உலகம் முழுவதும் கப்பல்கள் விபத்துக்களை சந்திக்கும் மோசமான பத்து இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இதனால் கப்பல்கள் விமானங்கள் இப்பகுதியை தவிர்த்துப் போவது ஒரு மரபாகவும் இருந்து வருகிறது.

இப்பகுதியில் திடீரென மாற்றமடையும் காலநிலையே விபத்துக்களுக்குக் காரணமென்று கூறப்பட்டாலும் அடிப்படை விளக்கங்கள் எதுவும் சரியாக பொருந்தி வரவில்லை.

அதற்கு முன் எங்கே இருக்கிறது போர்மூடா முக்கோண பிராந்தியம் என்று கேட்கிறீர்களா..?

அத்திலாந்திக் சமுத்திரத்தில் வட – தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே அமெரிக்காவின் புளோரிடா, போர்மூடா, போட்டோரிக்கா ஆகிய மூன்று இடங்களையும் இணைக்கும் முக்கோணப்பகுதியே போர்மூடா முக்கோணம் என்று வழங்கப்பட்டது.

இப்பகுதிக்குள் அடங்கும் கடற்பிராந்தியம் சுமார் 1.2 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஆபத்து வலயமாகும்.

இந்த போர்மூடா முக்கோணப்பகுதியையும் அங்கு நிலவும் மர்மத்தை விளக்கும் கதைகள் பல்லாயிரக்கணக்கில் வெளியாகியிருக்கின்றன. ஆனால் எதுவுமே ஊர்ஜிதமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து சவுத்காம்ரன் பல்கலைக்கழக நிபுணர்கள் சரியான காரணங்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாரம் இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சனல் 5 தொலைக்காட்சியில் தோன்றி தமது கண்டு பிடிப்பிற்கான ஆதாரங்களையும் உலகத்திற்கு தந்துள்ளனர்.

அவர்கள் கூறிய கருத்துக்களில் முக்கியமானது, 1997ம் ஆண்டு தென்னாபிரிக்கக் கரையோரமாக காரண காரியம் தெரியாமல் சட்டெனக் கிளம்பிய ஒரு பேரலையாகும். அந்த திடீர் பேரலையை சற்லைற் படங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

அது போன்ற பேரலைகள் போர்மூடா பகுதியில் அடிக்கடி கிளம்புவதே அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார்கள். இந்த அலை சாதாரணமானதல்ல சுமார் 30 மீட்டர்களுக்கு மேலும் உயர்ந்து செல்கிறது. இது ஒரு சில நிமிடங்களே நீடிக்கிறது, தொடர்ந்து அதிர்வுகளாக பல சிறிய அலைகள் அடிக்கின்றன.

இந்த அலை மட்டும் வந்துவிட்டால் சந்தேகமே வேண்டாம் அது ஒரு கடற்பூதம் என்று மனிதன் பயந்துவிடுவான். இதை சதாராணமாக ஒரு கப்பல் எதிர்கொண்டு மீள்வது கடினம். அலையில் ஏறிய கப்பல் முப்பது மீட்டர்களில் இருந்து கீழே குப்புற விழும்போது சிறுவர்களின் சறுக்கியில் சறுக்குவது போல சறுக்கி நிலை குலைந்து தண்ணீர் மோதி நீரைக்கோலி பிளந்துவிடும்.

fli

அதேவேளை இதில் இன்னொரு புதுமையும் இருக்கிறது. பொதுவாக அலைகள் ஓரிடத்தில் தோன்றி ஒன்றன் பின் ஒன்றாக இன்னொரு இடத்திற்கு நகரும். ஆனால் இங்கு நிலமை இயல்புக்கு மாறாக இருக்கிறது, அதுதான் விளக்கம்தருவதற்கும் சிக்கலாக இருந்துள்ளது. இதுபோல இன்னொரு அலை இந்த முக்கோணப்பகுதியின் இன்னொரு இடத்தில் தோன்றி முதலாவது அலைக்கு நேர் எதிராக வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் எப்படியிருக்கும்..?

முப்பது மீட்டர் உயரத்தில் இரண்டு அலைகள் எதிரெதிராக வந்தால் கப்பல்களால் அதை தாக்குப்பிடிக்க முடியுமா..? இதுதான் அங்கு நடைபெறும் இயல்புக்கு முரணான அசாதாரண நிகழ்வாகும். கற்பனை செய்யவே திகில் படங்கள் எல்லாம் தோற்றுப் போய்விடும் அச்சமே ஏற்படுகிறது.

சரி அலைகள் கிளம்புகின்றன ஆனால் அவை ஏன் எதிரெதிராகக் கிளம்புகின்றன..? இதுதான் அடுத்த கேள்வி.

இதற்குக் காரணம் கடலடியில் உள்ள அடர் சேற்றுப்பகுதியாகும். லட்சக்கணக்கான கெக்டேயர் பரப்புள்ள இந்த கடலடி அடர் சேற்று வலயம் மெத்தேன் எரி வாயுவை கக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக சேற்றுப்பகுதியில் திடீர் திடீரென குமிழிகள் கிளம்புவதை பார்க்கலாம், இது சேற்றில் உருவாகும் வாயு வெளியேற்றமாகும். அதுபோலவே இதுவும் இருக்கும். முன்னர் இலங்கையில் புகழ் பெற்ற எழுத்தாளர் இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதசரம் கதையில் வல்லை வெளியால் மாட்டு வண்டியில் போகும்போது நெருப்பு தோன்றுவதாகவும் அது கொள்ளிவாய் பேயென்றும் கதையின் நாயகி பயப்படுவதாக எழுதியிருப்பார்.

ber-5

பின்னர் வல்லைப்பகுதியில் உள்ள சேற்றில் இருந்து கிளம்பும் ஒருவித எரிவாயு காற்றோடு மோதுவதால் தீப்பிடிக்கிறது. அது பேயல்ல எரிவாயு என்று விஞ்ஞான விளக்கமும் கூறியிருப்பார்.

இலங்கையில் அக்காலத்தே அரசாங்க அதிபராக இருந்த இவர் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தவர். இவர் வெள்ளிப்பாதசரம் கதையில் சொன்ன அதே சேற்றில் இருந்து கிளம்பும் வாயு போன்ற ஒருவகை மெத்தேண் வாயுதான் இந்த அலைகளை பேய்கள் போல பொக்கென கிளப்பிவிடக் காரணமாகும்.

கடலடியில் இருந்து பெரு விசையுடன் கிளம்பும் எரிவாயு கடலின் கீழிருந்து வேகமாக நீரை இடித்து கொள்ளிவாய் பேய் போல உந்தித் தள்ளி வெளியே வரும். அப்போது அந்த இடத்தில் மட்டும் திடீரென அலை ஒன்று கிளம்பும். இதுபோல வேறு வேறு மூன்று இடங்களில் சம காலத்தில் மேலும் இரண்டு அலைகள் கிளம்பினால் என்னவாகும்..

பிரமாண்டமான அலைகள் எதிரெதிராக வந்து மேதி வெடித்து பரவும், அகப்படும் கப்பல்களில் இருப்போர் ஐயோ என்று அலற முன் அனைத்தும் முடிந்துவிடும்.

இவ்வாறு மர்மத்தை அவிழ்த்துள்ளார்கள் விஞ்ஞானிகள். இது ஓர் எளிமை விளக்கம் மேலும் பல விபரங்களை அவர்கள் தருகிறார்கள்.

வேகமாக ஏவுகணைபோல வரும் இந்த எரிவாயுவை ஆகாயத்தில் வரும் விமானம் எதிர்பாராத விதமாக சந்தித்தால் என்னவாகும்..? அந்த இடத்தில் இந்த கொள்ளிவாய் பேயானது விமான எதிர்ப்பு பீரங்கியாக மாற வாய்ப்புண்டல்லவா..? அது விமானத்தின் காந்த சக்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். எரிபொருள் குழாயை எட்டித்தொட்டால்..? அமெரிக்காவில் இருந்து 1945 பயிற்சிக்கு சென்ற ஐந்து விமானங்கள் ஆகாயத்தில் இதை சந்தித்துள்ளன.

elan

அக்காலத்தே நமது வெள்ளிப்பாதசர கதாநாயகி போல இவர்களும் இதை பிசாசு என்றே நினைத்து பயந்துள்ளனர். இப்படி பல சுவாரஸ்யமான ஒப்பீட்டுச் சிந்தனைகளை உருவாக்கவும் சனல் 5 தொலைக்காட்சியின் போர்மூடா முக்கோணம் தொடர்பான நிகழ்ச்சியானது தூண்டுகோலாக இருக்கிறது.

இப்படிப்பட்ட போர்மூடா முக்கோண மர்மத்தை உடைத்தது யார்..?

வல்லை வெளியில் உள்ள சேற்றை வைத்து கொள்ளிவாய் பேயை விளக்கிய நமது இலங்கையர்கோனா இல்லை கடலில் உள்ள சேற்றை வைத்து விளக்கிய இங்கிலாந்து சவுத்காம்ரன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளா..? எதிர்காலத்தில் இதை வைத்து பட்டிமன்றம் போட்டால் நமது மக்கள் இலங்கையர்கோனை மறு வாசிப்பிற்குள்ளாக்கலாம்.

போர்மூடா முக்கோணத்தை மட்டுமல்ல நம்மூர் வெள்ளிப்பாதசரம் சிறுகதைத் தொகுப்பையும் எங்காவது இருந்தால் தேடிப்படியுங்கள்.

கி.செ.துரை 29.08.2018

bermu-2

Related posts

Leave a Comment