திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்

tris

தமிழ் பட கதாநாயகர்களில் சிலர் படத்துக்கு படம் தங்களை புதிய தோற்றத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள். இந்த முயற்சியில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள்.

கதாநாயகர்களைப்போல் சில கதாநாயகிகளும் வித்தியாசமான கதைகளிலும், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்த பட்டியலில் புதுசாக இணைந்திருப்பவர், திரிஷா.

இவர், ‘அரண்மனை,’ ‘நாயகி,’ ‘மோகினி’ ஆகிய படங்களில் பேய் வேடங்களில் நடித்து மிரள வைத்தார். ‘கொடி’ படத்தில், அரசியல்வாதியாக வில்லி வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

அடுத்து இவர் நடித்து, ‘96’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம், இது. இதனால், ‘96’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘டிரைலர்’ அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்ப திரிஷாவும் தனது சிகை அலங்காரத்தை மாற்றியிருக்கிறார். புதிய தோற்றத்தில் அவர் இன்னும் இளமையாக காணப்படுகிறார்!

Related posts

Leave a Comment