சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் 09

கதையை தொடங்க முன்னர் ஒரு சிறிய முன்னோட்ட காட்சி..

வெள்ளித்திரையில் ” பட்பட் படீ ” ரென சில பிரளயகால வெடிகள்.. அவை என்ன இடி முழக்கத்தின் எச்சங்களா..? காலத்தின் கடிகாரம் வெடிபட இடித்து வெகு பின்னோக்கி அறுந்த துண்டுகளாக ஓடுகிறது.. நாள், மணி, நிமிடம், விநாடி எல்லாம் “சரக் சரக் ” கென சுழன்று நிற்கின்றன.

வேறென்ன பார்க்கத்தானே வேண்டும்… இமைகளை வெட்டத்தான் முடியுமா..? 1989 மாசி 24ம் திகதி அதிகாலை..! ம்… காலம் ஏன் இந்த இடத்தில் நிற்க வேண்டும்..? செல்வாவும், சுரேசும் கூர்ந்து பார்க்கிறார்கள்.

காலைப்பனி நுளம்பு வலைபோல மூடிக்கிடக்கிறது. ஆட்காட்டி குருவிக்கும் அங்கு ஏதோ வேலை. குணுக்குகளாக பனி தொங்கிய இரண்டு ரோஜாக்களின் இதழ்கள் குருவியின் சத்தத்தில் ஒடிந்து பொல பொலவென கொட்டுண்டு சிலோமேஷனில் வெள்ளிக் காசுகளாக பொழிகின்றன.. சுண்டிய நாணயங்களாக சுழலும் இதழ்களில் “விசுக் விசுக்” கென விதியின் ராகங்கள்.

அந்தோ..!

புகையின் கூட்டுக்குள் ஒரு கார்.. கூர்ந்து பார்க்கிறோம்.. கண்களின் லென்ஸ்கள் “கிறீச் கிறீச்”சென முன்னும் பின்னும் ஓடி போக்கஸ் செய்கின்றன. சந்தேகமே இல்லை அது ஜெயலலிதாவின் வண்டிதான். அவருக்கு அருகில் யார் சசிகலாவா.. ஆம் அவரேதான்.

” இருவருமா..? சபாஸ்.. ஒரே வீச்சில் இரண்டு கனிகளை வீழ்த்தலாமே..? சரிதான்.. இப்போது ஒரு லாரி வரவேண்டுமே.. அதோ.. தொலைவில் லாரிதான்..” தலையை மாற்றிப் போட்டு ஜெயலலிதாவைப் பார்க்கிறோம்.

பாவம் அவர் பாண்டிச்சேரியில் தோல்தல் பிரச்சார கூட்டம் முடித்துவிட்டு வருவதால் அசதியோ அசதி உறக்கக் கலக்கத்தில் இருந்த தோழிகூட அந்த லாரியை எதிர் பார்க்கவில்லை.

எதிரிக்கு இதுவல்லோ தருணம்..!

சம்பவம் நடக்கப்போகும் லொக்கேஷனைப் பார்க்கிறோம் சென்னை விமான நிலையத்தைத்தை அண்டி மீனம்பாக்கம் சாலை..! விதி மன்னன் காரையும் லாரியையும் கயிறு போட்டு சுண்டி விடுகிறான்… அது அவனுக்கு வேடிக்கை.

” வண்.. ரூ.. த்றீ.. டுமில்..!!! ” மத்தியஸ்தர் துப்பாக்கியின் விசையை தட்ட ஆட்டம் ஆரம்பமாகிறது. முன்னங்கால்களில் மண்ணை வாரி எறிந்த, அமெரிக்காவின் காட்டெருமை ஒன்று எகிறி ஆரோகணித்து எழுவது போல பாய்ந்து வருகிறது லாரி..

அது தற்செயலாக வருகிறதா.. இல்லை திட்டமிட்டுத்தான் வருகிறதா…?

” ஐயகோ..! என் செய்வேன் இந்த தமிழ் சாதியை…! ” பாடியவன் வாழ்க அவன் பாடல் கேட்கிறது.

” வா…வா….ஓ..ஓ…ஓ… பங்க்க்க்..!!!!”

ஒரே எற்று அவ்வளவுதான்.. ஜெயலலிதாவின் காரின் மீது பலமோ பலம் கொண்ட மட்டும் வெறித்தனமாக மோதுகிறது லாரி. கார் சக்கை.. அது புலி அடித்த குட்டிமான் போல சுழல்கிறது. உள்ளே இருந்த இவருவரும் உயிர்தப்ப வாய்ப்பில்லை..

jeya-acc

ஆனால் விதி, சிறிய அளவில் சில்லை அசைத்தது போல ஒரு குருணி கல்லால் லாரியின் சில்லை அசைத்திருந்தது. அதனால் அடித்த அடியில் ஓர் உயிர் சறுக்கல்..

ஊசலாடும் கணங்கள். ஆம்புலன்ஸ் வண்டிகளின் அலறல் சத்தம்.. அதோ ஜெயலலிதா வைத்தியசாலையில் கிடக்கிறார்.

காட்சிகள் மெல்லச் சுழல்கின்றன.. ராஜீவ்காந்தி வைத்தியசாலை வந்து பார்ப்பது தெரிகிறது.

பத்திரிகைள் அச்சடிக்கும் இயந்திரங்கள் சற்று முன்னதாகவே சுழல்கின்றன.. பெட்டிக் கடையில் தொங்கும் மாலை நேர பத்திரிகையில் தன்னை “கொல்ல சதி” நடப்பதாக.. ஜெயலலிதா கூறியதாக செய்தி.. அதுவும் சிவப்பு மையில்.

ட்ரெய்லர் முடிகிறது..! படக்கருவியை அணைத்துவிட்டு ஆப்பரேட்டர் செல்வாவை கூர்ந்து பார்க்கிறார்.?

யார் அவர் என்று கேட்கிறீர்களா..? அவர்தான் கால்டு வெல்டின் வக்கீல். குரலைக் கனைத்தபடி, “செல்வா சிறிய காணொளியைப் பார்த்தாயா..?” கேட்கிறார்.

“பார்த்தேன் முன் பத்திரிகையிலும் படித்துள்ளேன்..! ஏனோ இதை நினைவில் இருத்தத் தவறிவிட்டேன்.”

“சரி.. தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று ஜெயலலிதா கூறியதை படித்தாயா..? ”

” ஆம்..! ”

” அதற்கு பின் அவர் எத்தனையோ தடவைகள் தமிழக முதல்வராகிவிட்டாரே..??? அவரால் அந்த சதியை கண்டுபிடிக்க முடிந்ததா..? ”

” இன்றுவரை இல்லை…!” இது சுரேஸ்.

” ஜெயலலிதாவுக்கு பகைவர்.. ஒருவரல்ல உள்ளும் வெளியும் ஓராயிரம் உண்டு.. ஒரு சில ஆயிரங்கள் போதும் இந்த லாரியை ஏவிவிட.. ஆகவே அவருடைய நேர் எதிரிதான் இதற்குக் காரணமென்று ஒரே நேர்கோட்டில் பார்க்கலாகாது..”

” ம்.. நீர் சொல்ல வருவது புரிகிறது..! ஒரு பைத்தியம் கூட இதன் பின்னால் இருந்திருக்கலாம்..!”

” காரால் மோதிய சதியை கண்டு பிடிக்காவிட்டாலும், முதல்வர் ஸ்தானத்தில் இருந்து மரணித்த போது கூட மரணத்தின் பின்னணியை அவரால் தடுக்க முடியவில்லை என்கிறார்களே ஏன்..? ”

” அதுதான் இந்த நாட்டின் தவறென்று கூச்சலிடுகிறேனே..! ஒரு முதல்வரின் மரணத்திற்கே இந்தக் கதியென்றால் ஒரு சாதாரண மனிதனின் நிலை என்ன..? இதுதானே இவர்கள் மீது எனக்குள்ள கோபம்..! இந்தத் தவறு ஒன்றும் கற்காலத்தில் நடக்கவில்லை 21ம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது..” என்கிறான் கோபத்துடன் செல்வா.

” கோபத்தை விடு செல்வா..! இப்போது சொல் ஒரு வேளை நீ தப்பியிருந்தால் உன் மரணத்தின் கிடக்கும் மர்மத்தை உன்னால் முடிச்சவிழ்த்திருக்க முடியுமா..? அதைக்கேட்கவே இந்த ட்ரெய்லரை போட்டேன்.” வக்கீல் சொன்னார்.

செல்வா சிரித்தான்..,” இந்த வாகன வெள்ளத்தில் லாரி ஒரு கொலைக்கருவி. அதை எதிரிகள் மட்டுமல்ல நமக்கு வேண்டியவரும் பாவிக்கலாம். ஆனால் அதைத் தடுக்க புது விதி செய்திருக்க வேண்டும்..!! அமெரிக்க இரட்டைக் கோபுரத்தில் திட்டமிட்டு விமானங்கள் மோதியதற்கும், இந்த வீதிகளில் திட்டமிட்டு லாரிகள் மோதுவதற்கும் என்ன வேறுபாடு..? அது பயங்கரவாதம் என்றால் இது என்ன வாதம்..? இதை ஏன் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கொண்டு வரவில்லை..?”

” இந்தக் கேள்வியை உனக்கு முன் கேட்டவனில்லை.. இப்போது உனக்கொரு சிறிய வரலாற்றுச் சம்பவத்தை சொல்லவா..?”

” ம்..!”

” அதோ பார் போத்துக்கேயருடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து முற்றுகைப் போர் புரிந்துவிட்டு போய்க்கொண்டிருக்கிறான் இலங்கை மன்னன் முதலாம் இராஜசிங்கன்..”

sel-17

முகத்தில் மரணக்களை.. இன்று போய் நாளை வா என்ற பாடல் போன்ற பின்னணி இசையை ஆயிரக்கணக்கான வித்துவான்கள் வாசிப்பது போல பக்கவாத்திய ஓசை இருக்கிறது. ஒரு பறை மேளம் “தொம் தொம்” என போடுகிறது.. ஆம்..! அவன் பெரும் இழப்புகளுடன் போகிறான்.

” இழப்பின் சோகத்தைப் பார்க்காதே ! முதலில் அவன் கால்களையே கூர்ந்து பார். காரணத்தை பின் சொல்கிறேன்..!”

பார்க்கிறான் செல்வா.. முள்ளா அது..? மரண முள்..! கண்ணில் பாய்ந்தால் பிடரியால் வெளியே பாயும் வேட்டை அம்பு போல.., லாரி போல மோத காத்திருக்கிறது முள்..! செல்வா “கவனம் கவனம்” என்று கூற முன்னரே சரக்கென காலில் ஏறுகிறது.. “ஆவ்..!” அதை இழுத்து வீசுகிறான்.

இரத்தம் மொட மொடவென மண்ணில் கொட்டுகிறது. விதி..! இதுதான் அவன் மரண இரத்தம். உயிரின் ஒழுக்கு.. ஆனால் அவனுக்கோ அது தெரியவில்லை, தொடர்ந்து நடக்கிறான். போத்துக்கேயரை எப்படி நாட்டை விட்டு விரட்டுவது என்ற கேள்வியே அவன் மூளைக்குள் ஓடும் படச்சுருள். மாறாக முள் அவனை உலகை விட்டே விரட்டப்போவது அவனுக்கெங்கே தெரியப்போகிறது…?

அந்தக் காயம் அபாயமாகி, ஏற்பு வலியாகி, துடிதுடித்து உயிர் பிரிகிறது.! போத்துக்கேயரின் பீரங்கிளால் நெருங்க முடியாத அவனுடைய வீர உடல் கேவலம் ஒரு சிறிய முள் குத்தி மரணக்குழியின் சேற்றில் அமிழ்கிறது. தூரத்தே புத்த விகாரை ஒன்றின் மணி.

” செல்வா.. பார்த்தாயா போத்துக்கேயரால் வீழ்த்த முடியாத ஒருவனை இந்த சிறு முள் வீழ்த்திவிட்டது.”

அப்போது தொகுப்புரை தருவது போல ஒரு சீனப் பழமொழி மங்கலாகத் தெரிகிறது. ” நம் திட்டங்களும் இலட்சியங்களும் குறித்து, எழுதிச் செல்லும் விதிக்கு எந்தக் கவலையும் இல்லை..!! அது தனது கடமையை செய்வதற்காக எந்த நேரமும் நம் வாழ்க்கை பாதையில் கட்டையை போட்டு குறுக்கிடலாம்..!!” என்று கூறுகிறது.

” இப்போது தெரிகிறதா உன் பாதையின் குறுக்கே விழுந்த கட்டை எதுவென்று..? ”

” தெரிகிறது..!”

” சரி மறுபடியும் கேட்கிறேன் உன் மரணம் சொல்லும் செய்தி என்ன..?”

” வாழ்ந்தும் வெல்லலாம்..! வீழ்ந்தும் வெல்லலாம்…! என் மரணம் எனது வீழ்ச்சியல்ல.. அது என் எதிரிகளின் வீழ்ச்சி..!”

pandiya-17

” ஓ.. அப்படிப் பார்க்கிறாயா..? அதற்கு அசாதாரண மனம் வேண்டும் எங்கே விளக்கு..!”

செல்வா கை விளக்கின் திரியை தீண்டுவது போல தன் கருத்து விளக்கைத் தீண்டுகிறான்.. ” சீன பழமொழி என்ன சொன்னது நமக்காக விதி காத்திருப்பதில்லை என்கிறதா.? அப்படியானால் ஆரியம், திராவிடம் இரண்டிற்க்காக மட்டும் விதி தாமதிக்குமா..? அவைகளின் குறுக்கேயும் ஒரு கட்டையை போடத்தானே வேண்டும்…? விதி போடவில்லை நான் உருட்டிவிட்டேன்.. போதுமா..? ”

” அளவுக்கு மீறிய ஆசை..! செல்வா.. நிறுத்து உன் ஆசைக்கு நான் அனுமதி தரமாட்டேன்..!” ஒரு கோபமான கேட்கிறது குரல்.

” யார் கால்டு வெல்டா..? ”

” ஆம்.. செல்வா உனக்கு ஆசை அதிகம்..! விதி கூட தோற்றுப் போகும் வலிமை ஆரியம் திராவிடம் என்ற இரு இரும்புக் கொள்கைகளிலும் இருக்கிறது..! கால்டு வெல்டு குறுக்கிடுகிறார்.

” அப்படியா எங்கே விளக்குங்கள் பார்க்கலாம்..? ” இது சுரேஸ்.

” உலகம் முழுவதும் பரவியுள்ள ஆதிக்க சக்திகள் வெற்றியை ஒரு காலமும் உன்னைப்போன்றவர்களிடம் தாரை வார்க்காது..! ”

” ஏன்..?”

” அதிகாரத்தில் இருப்பவன் வைத்ததுதான் சட்டம். அவன் எழுதுவதுதான் வரலாறு. அவன் சொல்வதுதான் வேதம்.. ஆகவே அதிகாரம் என்றுமே ஆளப்படும் ஏழைகள் கைகளுக்குப் போனது கிடையாது.”

sel-7

” விளக்கமாக சொல்லுங்கள்..!” சுரேஸ் விடவில்லை.

” அன்றொரு நாள் காலனித்துவ ஆட்சி முடிந்துவிட்டதாக மனிதன் கனவு கண்டான். ஆனால் அது தொலைந்ததா..? இல்லை வடிவம் மட்டுமே மாறியிருக்கிறது. யார் காலனித்துவத்தை உருவாக்கினார்களோ இன்றும் அவர்கள் கையில்தான் இந்த உலகத்தின் அதிகாரம் இருக்கிறது. பின்னணிக்காட்சிகள் மட்டுமே மாறியிருக்கின்றன. ஆனால் அதிகாரத்தில் இருப்பது அதே பழைய ஆள்.. அவன் மிகமிக பழைய ஆள்.. புரிகிறதா..? ”

” புரிகிறது.. புரிகிறது.. சரி.. அவனுடைய ஆசை எப்போது முடியும்..? ”

” எப்போதா என்ன விளையாடுகிறாயா..? எப்போதுமே இல்லை..! அது விதியாலும் அளக்க முடியாத, ஊழிக்காலம் கடந்த முடிவிலி.. ஆசையோ.. ஆசை..! கட்டுக்கடங்காத பேராசை..!”

” ஆக அவன் அதிகாரத்தில் இருந்து இறங்கப் போவதில்லை. அப்படித்தானே..? ஆயின் அவனை நாம் தானே விரட்ட வேண்டும்..? இதைத்தானே சற்று முன்னரும் சொன்னேன்.!”

” வாயால் சொல்லலாம் ஆனால் செய்ய முடியாது.. ஏன் தெரியுமா..? தனக்குக் கிடைக்காத பால் இன்னொருவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் அவன். உன்னிடம் அதிகாரம் வருமானால் அவன் அதற்காகவே இந்த உலகத்தை அழித்து தானும் அழிந்து போவான்..!! இதோ பார் செல்வா ஓர் அடிமை என்றுமே சுதந்திரம் பெற முடியாது. உன்னால் முடியுமாக இருந்தால் உண்மையாகவே சுதந்திரம் பெற்ற ஓர் உலக அடிமையை காட்டு பார்க்கலாம். எல்லாமே காகித சுதந்திரம்தான்..”

” நீர் சொல்வது சரிதான்..! அதற்காக நாம் உறங்கிக் கிடக்கலாமா..? அந்த அறியாமை உடைக்க போராடுவதுதானே நம் பிறப்பின் கடமை..? ”

” உடைக்கப் போகிறாயா.. நீயா.. பைத்தியக்காரா உன்னால் அதை உடைக்க முடியுமா..? ”

” முடியும்..!”

” முடியாது..! ஒரு வேளை முடிந்தால் அதற்கு முன் வல்லாதிக்க சக்திகள் இந்த உலகத்தை அழித்துவிடும்.. பார்க்கப் போகிறாயா..? அதோ..”

sel-14

உலகத்தில் யாருமே பார்க்க இயலாத மர்மத் திரைகள் விலகுகின்றன.. கடலடியின் காட்சிகள் எல்லாம் கண்ணாடியில் தெரிவது போல ஸ்படிகமாக.. அங்கே.. பல்லாயிரக்கணக்கான நீர்மூழ்கிக் கப்பல்கள் திமிங்கிலங்கள் போல ஓடிக்கொண்டிருக்கின்றன.

” இவை எல்லாம் என்ன..? திமிங்கிலங்களை விட அதிகமாக உள்ளனவே..?”

” எல்லாமே அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள். வெறும் பத்தே பத்து நொடிகளில் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பஸ்ப்பமாக்கிவிடும் கொடிய அணு ஆயுத கொலை மிருகங்கள். இன்னும் வேண்டுமா..?”

ரஸ்யாவிடமிருக்கும் சாத்தான் இரண்டு என்னும் அணு குண்டு தாங்கிய ஏவுகணைகள் புற்றீசல்கள் போல சுழன்று பறக்கின்றன.

” இவற்றை எப்படித் தடுப்பது..?” சுரேஸ் கேட்கிறான்.

கால்டு வெல்டின் உதட்டில் ஒரு சிரிப்பு ஓடி மறைகிறது.. அடுத்த காட்சி.. புவியை துளைக்கும் மோசமான ஏவுகணை பறக்கிறது..

புவிக்கு அடியில் பல அடுக்குகளாக தடைச் சுவர்களை இரும்பிலும், கொங்கிறீற்றிலும் கலந்து கட்டி, பதுங்கியிருக்கிறான் ஒருவன்.. நிலத்தை பல கி.மீ துளைபோட்டு சென்று இரும்புத் தடைகளை நொருக்கி, மேலும் நெடுந்தூரம் சுரங்க வழிகளால் ஓடி.. தேடுகிறது அவனை.. அதோ அவனேதான்.. ஓங்கி வெடிக்கிறது அந்த ஏவுகணை.. அவன் பஸ்ப்பமாகிறான். யூ.எஸ்.ஏ என்ற பெயர் அந்த ஏவுகணையில் தெரிகிறது.

” போதுமா..? யாரையும் எங்கு மறைந்திருந்தாலும் அழிக்கலாம்..! இனி ஆகாயத்தைப் பார்.. நீ எந்த அறைக்குள் மறைந்திருந்து என்ன மொழியில் எதைப் பேசினாலும் அதை அப்படியே களவாடி தகவல் அறியும் சற்லைற்றுக்களைப் பார்.!” வக்கீலின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

sel-16

பதுங்கு குழியில் இருந்து ஈழத்தமிழன் ஒருவன் தமிழில் பேசுவதை அது ஆங்கிலத்தில் மாற்றிப் பேசுகிறது.. வன்னியில் பேசிய எல்லா தமிழ் சொற்களும் ஆங்கில சொற்களாகி காற்றில் புற்றீசல்களாக பறக்கின்றன.. இரகசிய மில்லாத அம்மண உலகமாக மிளிர்கிறது விஞ்ஞானம்.

மேலும் ஒரு கதவு திறக்கிறது.. புதுவகை ராக்கட் ஒன்று வெள்ளிரும்பு மேடையிலிருந்து கிளம்புகிறது.. ” இது எதற்காக தெரியுமா..? புவியை அழித்துவிட்டு வேறு கிரகத்திற்கு தப்பியோட செய்யப்பட்டிருக்கும் ராக்கட்தான்.. இது..!! இன்னும் இருக்கிறது, சொன்னால் நம்பமாட்டாய்.. ” வக்கீலின் முகத்தில் பெருமை கொப்பளிக்கிறது.

இப்போது மீண்டும் கால்டு வெல்டு குறுக்கிடுகிறார். ” தான் வாழும் உலகத்தையே அழித்துவிட்டு தப்பி ஓட கேடுகெட்ட மனித மனம் தயாராகிவிட்டது. இவன் அதிகாரத்தை இழக்க சம்மதிப்பானா..? உண்மையை சொல் இவன் உலகத்தின் அதிகாரத்தில் இருக்கும் போது அன்பிற்கும், மானிடத்திற்கும் எப்படி விசுவாசமாக இருப்பான்..? இதுதான் யதார்த்தம்.. இப்படியிருக்க ஒன்றுமே இல்லாத உன் கையில் அதிகாரம் எப்படி மாறும்.. முடிந்தால் விளக்கு..” கால்டு வெல்டும் அவர் வக்கீலும் தமது வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்.

sel-15

சிறிய செருமல்.. செல்வாவின் வாதம் உடன் ஆரம்பிக்கிறது. முதல் விசாரணைக்காக அவன் தன் கைகளைத் தட்டுகிறான்.. ஐன்ஸ்டைன் தலையை கோதியபடி நிற்கிறார்.

அவரின் உருண்டையான கண்கள் செல்வாவையே பார்க்கின்றன..” உனக்கும் எனக்கும் கண்கள் ஒன்று..” சிரிக்கிறார்.

” ஐன்ஸ்டைன் அவர்களே.. அந்த பூமிபற்றி சில கேள்விகள் நான் உம்மிடம் கேட்கலாமா..?”

” தாராளமாக..!

” நீர் செய்த அணு குண்டுகளால் அந்த உலகத்தை அழிக்கலாமா..?”

” முடியாது..!”

” அப்படியானால் அதை எதற்காக உருவாக்கினீர்கள்..?”

“அறியாமை..!”

” அதனால் எதுவுமே செய்ய முடியாது என்பதற்கான உதாரணத்தை இந்த பழைய மனிதருக்குக் கொடுங்கள்.”

” நண்பர் கால்டு வெல்டு அவர்களே.. இந்தப் பூமி பிரபஞ்ச வெளியில் அந்தரத்தில்தான் சுற்றுகிறது என்பது பொய் என்று முன்னரே சொல்லிவிட்டேன். அதோ பாரும்..”

அந்த அருவமான காட்சி இப்போது அனைவருக்கும் தெரிகிறது..!

” ஆகா.. தாங்க முடியாத இன்ப சுகம்.. கருணையே வடிவமான இயற்கையின் அன்பும் அரவணைப்பும் இதயத்தை குளிர வைக்கிறது.”

sel-13

தான் பெற்ற இளைய குழந்தையான பூமியை இயற்கை என்னும் பேரன்னை மடியில் சுமந்து கொண்டிருக்கிறது. அருவமாகக் கிடக்கும் அந்த காந்த வலையில் குழந்தை போல பூமி வழுகிச் செல்கிறது.

அந்தத் தாயின் முகத்தை எல்லோரும் பார்க்கிறார்கள்.. அவள் பாடும் தாலாட்டு கேட்கிறது. அந்த அன்பில்..

வஞ்சகம்..
சூழ்ச்சி..
பொறாமை..
சதி..
ஏகாதிபத்தியம்..
கம்யூனிசம்..
எல்லாமே உடைந்து உருகி மறைகின்றன.

” கால்டு வெல்டு அவர்களே இந்தத் தாயன்பை நீர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய போது பார்த்திருக்கிறீரா..?”

” இல்லையே..!”

” இப்போது கேட்கிறேன் இந்த அன்புக்கும் தமிழுக்கும் என்ன வேறுபாடு சொல்லும்..?”

” செல்வா.. கடலை விட பெரிதாக, வானைவிட விசாலமாக, இந்த அன்பு தமிழோடு கரைந்து ஒளிப் பிரளய ஜீவகாந்தமாக பாய்கிறதே…? அருவமும் உருவமுமாகி, அநாதியாய் பலவாய் ஒன்றாய் பிரமமாய் ததும்புகிறதே இந்தப் பேராறு..!”

” ஆம்..!

நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே..! மணிவாசகர் குரல் கேட்கிறதா..? ”

” ஐயோ.. வேறென்ன..?”

” இந்தத் தமிழ் பாடலுக்கும் நீர் காணும் அந்தப் பூமித்தாய் பாடும் பாட்டிற்க்கும் என்ன வேறுபாடு..? ”

” இதைப்பாடிய மாணிக்கவாசக சுவாமிகள் யார் தெரியுமா..? ” சுரேஸ் கேட்கிறான்.

manikka

” தெரியும் பாண்டிய மன்னனின் முதலமைச்சர்..! ” வக்கீல் கூறுகிறார்.

” இப்பொழுது தெரிகிறதா நான் ஏன் பாண்டியன் ஆனேனென்று..? செல்வா பாண்டியர்.. சுரேஸ் பாண்டியர்.. !”

அப்பொழுது அவர்களுடைய பார்வைச் சிறைக்குள் ஒரு கல்லறை தெரிகிறது.. அதில் ” இங்கே ஒரு தமிழ் உள்ளம் உறங்குகிறது ” என்ற வரிகளை காலம் தட்டச்சு செய்து சிரிக்கிறது..

” இந்தக் கல்லறைக்கு சொந்தக்காரர் யார்..? ” சுரேஸ் கேட்கிறான்.

” ஆங்கிலேயரான கிறீத்தவ பாதிரியார் போப் ஐயர்..! ” கால்டு வெல்டு பதில் கூறுகிறார்.

” அவர் ஏன்..? எதற்காக..? தன் கல்லறையில் தான் ஓர் ஆங்கில கிறீஸ்தவன் என்று எழுதாமல்.. தமிழனாக மரணித்ததாக எழுதி வைத்துப்போனார் சொல்லுங்கள்..?” கேட்கிறான் செல்வா.

” அவர் திருவாசகத்தை படித்த காரணத்தினால்..! இது குழந்தைக்கும் தெரியுமே..” – வக்கீல்.

” அதே போப்பையர் இங்கே ஒரு திராவிட உள்ளம் உறங்குகிறது என்று எழுதாதது ஏன்..? அவரும் உம்மைப் போல ஒருவர்தானே..? ” முறிக்கிறான் செல்வா.

கால்டு வெல்டு அமைதியாகிறார்.

“கண்களின் கண்களே.. நுண்ணிய புலன்களின் மயிர் கூர் முனைகளே மறுபடியும் பூமியை கண்ணாலும், கருத்தாலும், புலனாலும் பாருங்கள்.. அந்தத் தாயானவள் பூமியை ஒரு போதும் அழியவிடமாட்டாள் என்பது தெளிவிலும் தெளிவாகவே தெரிகிறதா..?” என்று ஐன்ஸ்டைன் கேட்கிறார். பின் சிரித்தபடி ” நான் இறக்கு முன்னரே இதைக் கண்டு கொண்டேன். அதனால்தான் இயற்கையை வழிபடுங்கள் என்றேன். ஏன் உங்கள் ஊர் சி.வி.ராமனும் அதைத்தானே சொன்னார் ” என்று முடிக்கிறார்.

” இப்போது சொல்லுங்கள் மனிதனால் பூமிப்பந்தை அணு குண்டுகளை வீசி அழிக்கத்தான் முடியுமா..? பூமியை அழித்துவிட்டு வேறு கிரகத்திற்கு தப்பிப் போகத்தான் முடியுமா..? ” செல்வா கேட்கிறான்.

” நிச்சயமாக முடியாது..!”

” அப்படி பூமியை அழிக்கவோ அங்கிருந்து தப்பிப் போகவோ முயன்றால்..? இயற்கை அவனுக்கு எதிராக ஒரு போரை பிரகடனம் செய்யும்..! மனித குலத்தையே புவியை விட்டு அப்புறப்படுத்திவிடும்.”

” எப்படி? ”

படித்துப்பார் சென்ற மாதம் வந்த பத்திரிகையை. ஏதோ ஒரு சக்தி அதை எடுத்து வந்து ஆபீஸ் பையன் போல போடுகிறது. ” பூமியை அழிக்க முயலும் மனிதருக்கு எதிராக இயற்கை பெரும் போர் ஒன்றை தொடுக்க தயாராகிட்டது !” என்று அதில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறார்கள்.

skov

வரட்சி என்ற கொலை வாளேந்தி புவியின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு மனிதனை விரட்டுகிறது வெப்பம். இன்னொரு பக்கம் வெள்ளமாக அடித்து நீரில் மூழ்கடிக்கிறது அடர் மழை. காட்டுத் தீயாக பரவி பொசுக்குகிறது அக்கினி காண்டம். இமயமலை போல சுனாமிகள் நெடித்து கிளம்புகின்றன. நில நடுக்கங்களாக அதிர்ந்து, ஓவென்றபடி புயலாக சுழன்று, யுகக்கடலாக பெருகி, நெருப்பை பொறியாக கக்கும் ரெனேடோ என்னும் பம்பரக் காற்றாக சுழன்று தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.

” பார்த்தாயா..? இந்த இயற்கையின் கோபத்தின் இலக்கு யார்..? சிங்கமோ புலியோ அல்ல மனிதன்தான். போதாவிட்டால் இதோ பார்..! அடுத்த பத்திரிகை கீழே விழுந்து பக்கங்கள் தானாக விரிகின்றன. படிக்கும் ஒலியை மட்டும் கேட்டாலே போதுமே..? ”

” சென்ற சில நாட்களில் மட்டும் புவிக்குள் சிறிதும் பெரிதுமாக 1210 பூகம்பங்களும், 82.800 பூமி அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருப்பதாக ” அந்தச் செய்தியின் ஒலி கேட்கிறது.

” இதற்குள் மறைந்திருக்கும் மர்மமான சமிக்ஞைகள் என்ன..? ”

” தான் பெற்ற அழகிய குழந்தையான பூமியை அழிக்க முயலும் கொடிய மனிதர்களை அழித்து இயற்கை தன் பிள்ளையை காப்பாற்றப் போவதாகக் கூறுகிறது. டைனசோர்களை அழித்தது போல மனிதனையும் அது புவியில் இருந்து முற்றாக அப்புறப்படுத்திவிடுவேனென உறுமுகிறது.. போதுமா..?”

” இரண்டு கிரகங்கள் ஒன்றோடு மற்றது மோத முடியாதபடி இந்த பிரபஞ்ச இயங்கியல் கணக்கைப் போட்ட அந்த மாபெரும் கணித மேதையை, ராமானுஜனை அனுப்பி இன்றும் புரிய முடியாத கணிதச் சூத்திரங்களை எல்லாம் போட்டுக்காட்டிய அந்த கலைஞனை, கரையில்லா ஞானப் பெருவெள்ளத்தை போயும் போயும் காமத்தின் அடிமையான மனிதனால் தோற்கடிக்கத்தான் முடியுமா..? செல்வாவின் கேள்விகள் தொடர்கின்றன.

அவ்வளவுதான் அக்கணத்தின் கருவின் இயக்கமே நின்று போய் எல்லாமே உறைந்து போய்விட்டன.. மயான நிசப்தத்தில் விறைப்போடிய பிரபஞ்ச வெளியில் அவன் குரல் மட்டுமே கேட்கிறது.

இடையில் திடீரென ஒரு தடை.! ” அப்படியானால் நாங்கள் உருவாக்கிய சித்தாந்தங்கள் எல்லாமே பிழையா..?” என அது முழங்குகிறது.

” ஆம்..! இந்தக் கேள்விதான் இன்னமும் வரவில்லையே என்று காத்திருந்தேன்.. வந்துவிட்டது.. சொல்கிறேன் கேள்.” தொடர்கிறான் செல்வா.

” சித்தாந்தங்கள் எல்லாமே அழகாகத்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை கடைப்பிடிக்க எழுதிய சித்தாந்தவாதிகளுக்கு போதிய தகுதியில்லை. சித்தாந்தத் திரைகளுக்கு பின்னால் சுயநலவாதியாக, கபட சூத்திரதாரியாக கேவலம் மனிதன் மறைந்திருக்கிறான்.”

” ம்… மேலே சொல்..!” ஒரு குரல்.

” அதனால்தான் சரியான பெறுபேறில்லாத, பொருளாதார, அதிகார ஏற்றத்தாழ்வான இந்த சித்தாந்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! அனைத்தும் சுனாமியில் அகப்பட்ட கப்பலாக உடைந்து சிதறும் என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது.! ஆனால் இதில் ஒரு நன்மையும் உண்டு. இந்தத் தப்பான சித்தாந்த பயணங்களின் உடைவே ஈற்றில் சரியானதைக் கண்டறிய வழி காட்டும்.!”

” நிறுத்து..! அப்படியானால் தமிழகத்தை தமிழன் மட்டும் ஆட்சி செய்தால் எல்லாமே முடிந்துவிடுமா..? அது ஓர் உலகக் கொள்கையா..? தமிழகம் நாடே இல்லை வெறும் மாநிலம் ..! அதை தமிழன் ஆண்டு என்ன பயன்..? ” அசரீரிதான் கேட்கிறது.

” அந்த நாடே இல்லாத.. வெறும் அதிகாரமற்ற… மாநிலத்தில் கூட அன்னிய அதிகாரத்தின் கொடி பறக்கிறதே..? அதுகூடத் தெரியாமல் இந்த பாமர மக்கள் வாழ்கிறார்களே..? அதைத்தான் ஏனென்று கேட்டேன். உலகத்தை நேசிக்கும் நீதி சொன்ன பாண்டிய மன்னர்களின் மண்ணில் நின்று அதையும் கேட்காவிட்டால் என் பிறப்பே பிழைத்துவிடுமே..? இன்னும் சொல்கிறேன் கேள்..!”

” தேவையற்ற பகை, அநீதியான குரோதங்கள் எவையுமற்ற சமரசம் கண்டவன் பாண்டியன்..! நீதி தவறிய போது உயிர் துறந்த வரலாறு பாண்டிய வரலாறு. இந்தப் பூமி எதற்காக படைக்கப்பட்டதோ அதை உணர்ந்து அதன் மேன்மைக்காக ஆட்சியை நடத்தியவர்கள் பாண்டியர்கள்.”

pandiya

” அசரீரிக்குள் மறைந்திருப்பவனே ஒன்றை புரிந்து கொள்..! நமது கொள்கை தனியே நம் நாட்டுக்கு மட்டுமே உரியதல்ல உலகத்தை தழுவியது.! இந்தப் பூமியை தாங்கி நிற்கும் தாயின் தாலாட்டு என் தமிழ்.! நாங்கள் இயற்கையின் பிள்ளைகள். எல்லோரையும் மகிழ்வோடும் மரியாதையோடும் வாழ வைக்கும் பாண்டிய கொள்கைக்காகவே நாம் போராடினோம். நாம் உண்மையின் எதிரிகள் அல்லவே..? ”

” பிழை விட்ட போது சிவனையே அடித்தவன் பாண்டியன். அதனால் நான் அநீதிக்கு எதிரான குரலாக இருந்தேன். மற்றப்படி பூமித்தாயின் ஒவ்வொரு பிள்ளைகளையும் நான் அன்புடன்தான் நோக்கினேன். நான் ஜாதி வெறியன் அல்ல..”

” ஒன்றே உலகம் என்ற கொள்கை தமிழ் மண்ணில் பிறந்தது.. ஆனால் அதுதான் உலகத்திற்கான வேதம்.. அதைத்தான் நான் பேசினேன்.. அதை என் பகைவன் தனக்கு தெரிந்த மொழியிலும், வழியிலும் சாதி வெறியென கொச்சைப் படுத்தினான் போதுமா..?”

” புரிகிறது.. தொடர் உன் வாதத்தை..”

” அதனால்தான் எல்லா கொச்சைத்தனங்களையும் முறியடிக்க பாண்டிய ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று துடித்தேன். என் சிந்தனை தனியே தமிழகத்திற்கானதல்ல இந்த உலகத்திற்கானது. இந்த உலக மக்கள் மீது நேசம் கொண்டு அவர்களை காக்கத் துடித்தேன்.. நான் சாதாரண மனிதனல்ல செல்வா பாண்டியர்..! ” அவ்வளவுதான்..

மீன் கொடியை கையில் தூக்குகிறான்.. அது அண்ட வெளியில் விண் மீன்களாக கரைந்து ஓடுகிறது..
” இப்பொழுதாவது புரிந்து கொள் விண் மீன்கள் என்றால் பாண்டிய மீன்கொடிதானென்று..! ” செல்வாவின் வாதம் முடிகிறது.

இப்போது கால்டு வெல்டு சிறிது மெல்லிய குரலில் பேசுகிறார்.

” செல்வா இந்தப் பூமியில் வாழ்ந்த பாண்டிய வேந்தர்கள் எல்லோருமே மரணிக்கும் போது இந்த மண்ணுக்கு மானத்தையே விட்டு சென்றார்கள் என்பதை நான் அறிவேன். உலகிற்கு நீதி சொன்ன மள்ளர்களை பொய்யாக புறந்தள்ளிய சதியையும் நான் அறிவேன்.! உரிமைக்கு போராடிய தமிழர் அனைவரும் திட்டமிட்டு, நயவஞ்சக வெள்ளையரால் தாழ்த்தப்பட்டு கிடப்பதும் நீ அறிவாய்.! ஒன்றை மட்டும் கேள். நாம் வாழ்வதும் இறப்பதும் ஒரு பொருட்டே அல்ல.! இந்த பூமி மாதாவை பெருமைப்படுத்த என்ன செய்தோம் என்ற கணக்குத்தான் முக்கியம்.! அப்படிப் பார்த்தால் பூமித்தாய் பெற்ற புத்திரரை தாழ்த்தப்பட்டோர் என்று அவமதிக்கும் அனைவரும் புவியை அழிக்க வந்த சாத்தான்களே..!”

” இதுதான் மனிதனையும் சாதத்தானையும் பிரிக்கும் பிரிகோடு..”

” செல்வா, சுரேஸ் நீங்கள் இருவரும் இந்த அழகான பூமியை தாய் போல நேசித்த பாண்டிய விளக்குகளே.. அதோ பாருங்கள் யார் வருகிறார்கள் என்று..”

ஆகாய வெளியில் ஒரு பொன்னில் வார்த்த படிக்கட்டு தடதடவென சுருட்டிய பாய் விரிவது போல கீழே இறங்குகிறது.. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலாவதாக வருகிறான்.. அவனைத் தொடர்ந்து பாண்டிய மன்னர்களின் வரிசை தொடர்கிறது..

pan-2

ஆகா காணக் கண்கோடி வேண்டும்.. காவியத்தின் தலைவர்கள் எல்லாமே கண் முன்னே..

மங்கல வாத்தியம் கொட்டி முழங்குகிறது.. தமிழ் பரிவாரங்களின் அணி வகுப்பு கண்கள் தெரியாத தொலைவிற்கு நீண்டு போகிறது.. இறப்பில்லாத பெரு வாழ்வு கண்டோர் படையல்லவா இது..

” செல்வா உனக்கு இந்த நேரம் ஓர் உண்மை சொல்லவா.. ” வான வெளி கேட்கிறது.

” ம்.. சொல்..!”

” மனிதன் இறப்பதில்லை.. அது தெரிந்தால் நீ தேவன்.. தெரியாவிட்டால் நீ மனிதன்..! இதுதான் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள வேறுபாடு. இது தெரியாத பேதை மகிழ்வுடன் இருக்க பேசப்படுவதே சாதிப்பாகுபாடு. சாதி பாகுபாட்டின் நோக்கம் வேறு இன்று அது திசை மாறிய போக்கு வேறு.. என்கிறேன். போதுமா..?”

” நன்றி இயற்கையே.. செல்வா வணங்குகிறான்.. இது என் மக்களுக்கு கேட்கட்டும் இக்கணமே..!”

இப்போது பாண்டியன் தெளிவாகவே தெரிகிறான்.. அவன் இறவாத பெருந்தகையல்லவா..?

பாண்டியன் கையில் வெற்றி மாலை.. பாண்டிமாதேவியிடம் ஓர் அழகான பாண்டிய முடி, முத்துக்களால் இளைத்து ஒளிர்கிறது.. வைரக்கைபிடியுடனான உறுதி கொண்ட பாண்டிய வீரவாள்.. செண்பக பாண்டியன் கரத்தில்.. மதுரை மீனாட்சியின் மீன்கொடி பறக்கிறது.. பச்சை நிற பட்டணிந்து வருகிறாள்..

madu

உலகத் தச்சர்கள் எல்லாம் ஒன்றுகூடி கட்டிய நவரத்தின மாளிகையாக தமிழ் வளர்த்த மதுரை சிற்பக்கூடமாக காற்றில் எழுகிறது..

இதுதான் உலகத்தின் முதல் பெரு நகரம்..!

இதுதான் தமிழ் வளர்த்த தலை நகரம்..!

இதுதான் பாண்டிய பண்பாட்டு நகரம்..!!

ஆயிரம் பேர் ஒன்றாக நின்று ஊதும் சங்கநாதம் வான் பிளக்கிறது..!!!

” உலக நகரங்களை எல்லாம் பெற்றெடுத்த பழம் பெரும் தாயான மதுரையே வணக்கம்..!”

செல்வாவின் ஆசைக்காதலி நதியா.. நதிபோல நகர்வது அந்த இன்பத்தில் தெரிகிறது. செல்வாவின் தந்தை, தாய் சகோதரிகள் எல்லோருமே அவன் கண்களில் தெரிகிறார்கள். சுரேஸ் மனைவி பிள்ளைகள், செல்வா நம்பிய தோழர்கள் எல்லாம் அணியணியாக.. அணியணியாக..

ஆண்டவனே.. அருந்தமிழே இதை எழுதுவது எப்படி..?

” இந்த இரவின் கனவில் நான் காண்பேன் உன்ன்..னை.. – அந்த
உறவின் ஒளியில் வா.. போவோம்..ம்ம்ம்….
நீநீஈஈஈஈ நாஆஆஆ..ன்ன்….
போவோ… ஓம் வான் வெளி
அன்று பார் இந்த உலகம் வாழ்த்தும்
எமை..ஐஐஐ…ய்ய்..”

கடலில் ஆழ்ந்த டைட்டானிக் கப்பலில் இருந்து இறந்தவர்கள் எல்லாம் எழுந்த போது வந்த பாடல்தான் தமிழிலில் ஒலிக்கிறது..

பிரிந்தவர் எல்லாம் இறப்பும் வாழ்வும் மறைந்து ஒன்றாகிறார்கள்.. இறப்பும் பிறப்பும் தோற்று இயற்கையில் இறப்பு பிறப்பில்லாத பெருவாழ்வு கீதமாகிறது.. காற்று தாலாட்டாகிறது..

” காதல் உன்னை தொட்டால் அது தொடரும்
அதோ பார்..
பிரிவு இல்லை இடையில் வா போவோம்…
நீநீஈஈஈஈ நாஆஆஆ..ன்ன்….
போவோ… ஓம் வான் வெளி
அன்று பார் இந்த உலகம் வாழ்த்தும்
எமை..ஐஐஐ…ய்ய்..”

star

அந்த வீரர்கள் இருவரும் உண்மையில் மரணிக்கவில்லை.. என்ற செய்தி கேட்டு அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்..

கோடன கோடி நட்சத்திரங்கள் எல்லாம் வான் வெளியில் சக்கரமாக சுழல்கின்றன.. சொற்ப நேரத்தில் நீலக்கடலில் பாண்டிய மீன்களாக துள்ளி ஓடுகின்றன.. கடகட வென்ற கானாமிர்த இசை பீறிடுகிறது..

” மையோ மறிகடலோ மழை முகிலோ.. ஐயோ..” என்ற கம்பரின் குரல் பேரோசையாகிறது..!

” கடுகைத் துளைத்து ஏழ் கடல் புகுத்தி குறுகத்தறித்த குறள் போன்ற இன்பங்களே.. நீங்கள் வாழ்க..!” வாழ்த்துகிறான்.. செல்வா..

அது..:

மாணிக்கவாசகர் தமிழ் போலே..
நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனி நீர் சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டாது இனிக்கிறது..

அக்கணமே அவன் மரணித்துவிட்டானென்ற செய்தி தோற்றது.. எல்லாமே இன்பமயமாகியது..!

இனி..

இந்தத் தொடர் நிறைவுக்கு வருகிறது..

அடுத்த வாரம் செல்வா பாண்டியர் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. அன்றய தினம் செல்வாவை நேசிப்போர் முன்னிலையில் இக்கதை படிக்கப்பட்டு செல்வா பட்டாபிஷேகமும் கொண்டாடப்படும்.

பாரதமும் இராமாயணமும் மட்டுமா படிப்புக்குரிய காவியங்கள்.. இல்லை இந்த பாண்டிய நிலாவும் கிராமங்கள் தோறும் படிப்பாக படிக்கப்படும் காவியமன்றோ..?

செல்வா என்ற வீரன் கதை பாராதக் கதைபோல நிலவ வேண்டுமல்லவா..?

கி.செ.துரை 29.08.2018

தொடரும்..

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 8

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 7

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 6

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 5

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 4

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 3

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 2

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் Part 1

nila-2

pandiya-11

Related posts

Leave a Comment