TAKE THAT | DEYO & VashanthS புதிய இசைக்காணொளி எம்.ரி.வி தரத்தில்..

இசையமைப்பு டெயோ டிலக்சன்-பாடல் இயக்கம், படத்தொகுப்பு, வர்ணம், நடிப்பு வஸந்த் செல்லத்துரை..

TAKE THAT | DEYO & VashanthS feat. Markia

ஒரு காலத்தில் பாடல்கள் என்றால் அது தமிழகத்தில் இருந்துதான் வரவேண்டும் என்ற கருத்து தமிழரிடையே இருந்தது.

இன்றும் அதன் சாரல் சிலரின் மன முகங்களில் படரத்தான் செய்கிறது..

ஆனால் டிஜிற்றல் உலகமும் புலம் பெயர் வாழ்வும் ஈழத் தமிழர்களின் கரங்களில் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம் பாடல் உருவாக்கமாகும்.

சர்வதேசத்தில் தமிழ் இளையோர் ஏற்படுத்தியிருக்கும் வலையாக்கமானது இன்று சர்வதேச தரத்தை எட்டித் தொடும் பாடல்களை தரக்கூடியதாக விரிவடைந்து வருகிறது.

ஒரு பாடலை எடுப்பதானால் அதன் அவுட்புட் எனப்படும் இறுதிப்பெறுமானம் இயக்குநரின் தலைக்குள் ஓட வேண்டும்.

ஓடினாலும் அதை நிதர்சனத்தில் ஓடவிட முடியாது.. தொழில் நுட்ப அறிவு, அதை புரிந்த கலைஞர்கள், வெளியிட பணம்.. சந்தைப்படுத்தல் என்று பல விடயங்கள் உள்ளன.

அன்று நம்மிடம் அவை இருக்கவில்லை..

அதனால் ஏதோ வந்தது சரியென்று திருப்திகாண்பதும் அவ்வப்போது வழமையாக இருந்தது.

ஆனால் இன்று நாம் கற்பனை பண்ணுவதைவிட அதிகமாக காணொளியிலும், ஒலிச் சோர்க்கையிலும் தரமுடிகிறது என்றால் தொழில் நுட்பம் கைகளுக்கு வந்துவிட்டதுதான்.

இந்தக் காணொளி அவுஸ்திரேலியாவில் தயாராகியிருக்கிறது.

இதனுடைய படத்தொகுப்பு, வர்ணக்கலவை, ஒலித்தொகுப்பு, மாஸ்டரிங், இயக்கம், றப் இசை மொழியாடல், கவி வரிகள் என அனைத்துமே சர்வதேச தரத்தில் உள்ளன.

ஒரு காணொளி தயாரிப்பானது..
அனுபவத்தால் மலரும் என்பது ஒரு காலமாக இருந்தது…
அதேவேளை கிரியேட்டிவ் என்பதும் ஒருவருக்கு அவசியமாக இருந்தது.

ஆனால் இன்றோ கல்வியினால் வரும் ஆற்றலும் நவீன உபகரணங்கள் பற்றிய அறிவும், புதிய கற்பனைகளையும், கிரியேட்டிவ் நிலையையும் அவற்றோடு சேர்த்து பிறப்பிக்கின்றன.

சினிமாவின் கிரியேட்டிவ் என்னும் உருவாக்கக் கற்பனையே புதிய தொழில் நுட்பத்தை உருவாக்குகிறது.

கற்பனையும் தொழில் நுட்பமும் கரையும்போதுதான் கலை உச்சம் பெறும்.

நமது தொழில் நுட்பத்தின் உச்சத்தை கலைஞர்களே சரியாக அறிந்தால் உருவாக்கக் கூடிய கற்பனையும் அதற்கமைவாகவே மலரும்.

ஒரு தொழில்நுட்ப காரனிடம் எல்லாவற்றையும் கொடுத்ர்விட்டு கலைஞன் அவனிடம் தங்கியிருந்தால் சரியான அவுட்புட் வராது.

ஆனால் கற்பனை தரும் கலைஞர்களே தொழில்நுட்ப பிரிவிலும் இருந்தால் இரண்டும் ஒன்றாகக் கரைந்துவிடுமன்றோ..?

இந்தப் பாடல் கற்பனையின் உச்சமா.. இல்லை தொழில் நுட்பத்தின் உச்சமா என்று பார்த்தால் இரண்டும் ஒன்றோடொன்று உரசும் மலை முகடுபோல இதன் இறுதி வடிவம் இருக்கிறது.

இதில் வரும் பெண்களைப் பார்க்கும் போது காலத்தின் மாற்றம் நமக்கு சொல்லும் செய்திகள் பல… சிவப்பு நிற ஆடை அணிந்திருப்பவர் ஒரு தமிழ் யுவதி.. நம்பத்தான் முடிகிறதா..?

படைப்பியல் அடையும் மாற்றம், எடுத்துரைப்பின் மாற்றம் இவைகளை நாம் கவனத்தில் கொண்டால் காலத்தின் மாற்றமும் வேகமாக இருப்பதைக் காணலாம்.

காலத்திற்கேற்ப நாம் மாறாவிட்டால் காலம் நம்மை கைவிட்டு நடந்துவிடுமன்றோ..?

இளையோருடைய எண்ணங்கள்..

அவர்கள் எப்படி வழங்கினால் அதிகம் பார்ப்பார்கள் என்பதை டென்மார்க் – அவுஸ்திரேலிய இளைஞர்கள் இவ்வாறு கற்பனை செய்கிறார்கள்.

ஒரு பெரியவர் சொன்னார் இந்தப் பெண்களுக்கு தமிழ் உடை அணிந்து, மல்லிகை வைத்து ஒரு சாட் வைத்திருந்தால் மேலும் சிலரை கவர்ந்திருக்கலாம் என்று.

அதற்கு அவர் சொன்ன விளக்கம் தானும் தன் உடலும் மாறுவது கூட தெரியாமல் இன்னமும் கனவில் அலையும் மனிதனுக்கு மாற்றம் புரிந்தால் இப்படி கனவில் மிதப்பானா..?

மேலும்..

பட்டை நாமம் தீட்டிய மனத்தோடு குந்தியிருக்கும் தமிழக சென்சார் போட்டின் அதிகாரிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள சிந்தனை வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கிறதன்றோ..

இப்படி பல பார்வைகள் இருந்தாலும் பாடல் பாடல்தான்.. அதை பார்தது ரசிப்பது நமது கடமை..

இவ்வளவு விளக்கமும் ஏன்..

எதிர்கால தமிழ் சினிமா முற்றாகவே கை மாறப்போவதற்கான முன் அடையாளமாக இந்த முன்பனி பார்வை இருக்கிறது என்பதால்தான்.

இதுபோல தரத்தை தொட முடியாதவன் பார்க்காமல் இருக்கலாம்.. பார்த்தவன் பேசாமல் இருக்கலாம்..

ஆனால் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் மறைக்கவா முடியும்..?

இவ்வளவையும் வாசித்துவிட்டீர்களா.. இனி மீண்டும் பாடலை ஒரு தடவை பாருங்கள்..

முதல் பார்வையை விட வித்தியாசமாக தெரியும்..

அலைகள் 10.06.2018 ஞாயிறு மாலை

Related posts

Leave a Comment