டென்மார்க்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழாவும் உருவப்பட திரை நீக்கமும்

வேலுப்பிள்ளை மனோகரன் உருப்படங்களை திறந்து வைத்தார்..

டென்மார்க்கில் தமிழர்கள் அதிகம் வாழும் கேர்னிங் நகரில் 09.06.2018 சனிக்கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழா மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.

பல்கலை திலகம் ராஜா குணசீலனின் வரவேற்புரையும், பாடல் அரசு பாத்தியின் வணக்கப்பாடலுடனும் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

அமைதி வணக்கம், உருப்பட திரை நீக்கத்தைத் தொடர்ந்து நூலை வெளியிட்டு வைத்தார் டென்மார்க்கில் வாழும் இலக்கிய கர்த்தாவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை அரசின் எழுத்துக்கான விருது பெற்றவருமான தமிழ்புகழ் தர்மா தர்மகுலசிங்கம் நுலை வெளியிட்டு வைக்க திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.

டென்மார்க்கில் வாழும் இலக்கிய கர்த்தாவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை அரசின் எழுத்துக்கான விருது பெற்றவருமான தமிழ்புகழ் தர்மா தர்மகுலசிங்கம் நுலை வெளியிட்டு வைக்க திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து மற்றையோருக்கான பிரதிகளை வழங்கினார், அத்தருணம் திரு. தர்மா தர்மகுலசிங்கத்தை நடிக விநோதன் திரு. ரீ. யோகராஜா பொன்னாடை போர்த்தி மாண்பேற்றினார்.

வெளியீட்டுரையில் தமிழில் இது புதியதோர் முயற்சி என்று தர்மா தர்மகுலசிங்கம் கூறினார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்றே அதிமாக எழுதப்படும் சூழலில் இருந்து வேறுபட்டு இராஜதந்திர நூல்களை எழுதும் காலத்திற்குள் நமது படைப்பிலக்கியத்தை நகர்த்தியிருக்கிறார்.

சர்வதேச அரசியல் விவகார இராஜதந்திர நூல்களை எழுதும் வழியில் இது முன்னோட்டமான முதற் தமிழ் நூல் என்ற சிறப்பைப் பெறுகிறது. ரியூப் தமிழ் நிறுவனம் இதை வெளியிட்டு வைத்திருந்தது.

“எழுத்து நடை, எடுத்துச் சொன்ன முறை, எளிமைப்படுத்திய தமிழ், பாமர மக்களும் சர்வதேச விவகாரத்தை புரியும்படியாக ஒரு விடயத்தை எப்படிச் சொல்லலாம் என்பதை நன்கு உய்த்துணர்ந்து கடின உழைப்பின் பின்னதாக உருவாக்கப்பட்டிருக்கிறது ” என்று தனது வெளியீட்டுரையில் குறிப்பிட்ட அவர் இது சிங்கள மொழியில் வெளிவரவேண்டும் என்று தனது ஆவலையும் வெளிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற கி.செ.துரை எழுதிய சர்வதேச அரசியல் விவகார முதல் தமிழ் இராஜதந்திர நூலின் வெளியீட்டு விழா முற்றிலும் வித்தியாசமான வெளியீட்டரங்காக மலர்ந்தது.

இதில் சிற்பம்சமாக ஒன்பது பெண்கள் கொண்ட அணி நூல் விமர்சனத்தை தனியாக நடத்தியது வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.

அத்தருணம் ஐரோப்பாவில் தான் கண்ட நூல் வெளியீட்டு விழாக்களில் இந்த அரங்கு மிகவும் காத்திரமான அரங்காக உள்ளதாக பிரபல புகைப்படப்பிடிப்பாளர் முரளிதாஸ் நடராஜா தெரிவித்தார்.

பெண்கள் அனைவரும் புத்தகத்தை முழுமையாக படித்து பேசியது ஒரு சிறப்பம்சம் அதிலும் ஒருவர் பேசிய விடயத்தையே இன்னொருவரும் பேசாமல் அனைவரும் தத்தமது கல்வி நெறிக்கேற்ப வித்தியாசமாகப் பேசினார்கள்.

ஒரு நூலை வேறு வேறுபட்ட கோணங்களில் நோக்கியதானது ஒரு புதிய பரிமாணமாகும் என்று பெண்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா தனது உரையில் கூறினார்.

நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா தலைமைதாங்க திருமதி லலிதா சிவகுமார், திருமதி சுதா வாமதேவன், திருமதி ஷகிலா சச்சிதானந்தம், திருமதி ரூபா குருஸ், திருமதி கௌரி விஜயன், திருமதி தர்சிகா சிறீராஜன், திருமதி பவானி செல்லத்துரை ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய உடன்பிறந்த சகோதரர் திரு. வேலுப்பிள்ளை மனோகரன் காலம் சென்ற இருவருடைய உருப்படங்களைத் திறந்து வைத்தார்.

இந்த நூலை வெளியீட்டுக்காக சென்னை எடுத்துச் சென்ற வேளையில் அதை வெளியீடு செய்தவரும், நிறைவுரை எழுதியவருமான செல்வா பாண்டியரும், சுரேஸ் பாண்டியரும் திருச்சி பெரம்பலூர் சாலையில் விபத்தில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அவர் தலைமை தாங்கிய தமிழர் நடுவத்தால் தமிழர் தேசியத் தந்தை மேதகு செல்வா பாண்டியர் என்று போற்றப்பட்டார்.

இவர்கள் இருவருடைய புகைப்படங்களையும் திரை நீக்கம் செய்து சுடரேற்றி மாண்பு கொடுத்தனர் திரு. திருமதி வேலுப்பிள்ளை மனோகரன் தம்பதியர்.

அத்தருணம் உயர்கல்வி கற்று சாதனை படைத்த நான்கு இளம் பெண்கள் பொன்னாடை அணிவித்து மாண்பேற்றப்பட்டனர். கல்வித்துறையிலும், வைத்தியத்துறையிலும் சாதனை படைத்த நான்கு இளம் பெண்களும், பெற்றோரும் தமது உள்ளத்து உணர்வுகளை அரங்கில் வெளிப்படுத்தினர்.

செல்விகள் றண்டிகா சிவகுமார் வைத்தியர், ஜெனி துரைராஜா வைத்தியர், மகிந்தா பகீரதன் ( சீன பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று திரும்பியவர்.) கிசானி ராஜராஜன் விமானப்பணிப்பெண் ஆகியோர் மாண்பேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் நடிக விநோதன் கவிஞர். திரு. ரீ. யோகராஜா தலைமையில் ஆண்கள் திறனாய்வரங்கு நடைபெற்றது. இதில் உயர் தொழில்நுட்பவியலாளர்கள், சைபர் கிரைம் கற்கையாளர், கல்வியியலாளர்கள், கவிஞர், அரசியல் தலைவர்கள் நடிகர் என்று பலதரப்பட்டவர்களும் உரையாற்றினார்கள்.

திருவாளர்கள் ஹரன் நடராஜா, பொறியியலாளர் மதுவந்தன், கவிஞர் இணுவையூர் சக்திதாசன், ரியூப்தமிழ் அதிபர் ரவிசங்கர், நடிகர் சு.சுகோந்திரா, கவிஞர் மு. இராஜலிங்கம், புகைப்படக் கலைஞர் முரளி நடராஜா, இலக்கியகர்த்தா தர்மா தர்மகுலசிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

இரண்டு அரங்குகளாக நடைபெற்ற திறனாய்வு இடைவேளையுடன் சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. அரங்கு நிறைந்திருந்த மக்களிடையே சிறிய சலசலப்பு கூட இல்லாமல் உரைகளிலேயே மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்தது தமக்கு பெரு மகிழ்வு தந்ததாக ஏற்புரையில் நூலாசிரியர் கி.செ.துரை குறிப்பிட்டார்.

நல்ல நிகழ்வுகளுக்கு மக்கள் மனப்பூர்வமாக ஆதரவு தருவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். ஆகவே மக்கள் வரமாட்டார்கள் என்று நமக்கு நாமே காரணங்களையும் நியாயங்களையும் கற்பித்துக் கொண்டு கலையை தப்பான தடத்தில் இறக்கிவிடக் கூடாது.

நல்ல கலைகளை முறைப்படி கற்று, இல்லாவிடினும் நன்கு பயிற்சி எடுத்து அழகிய முத்தமிழ் முத்துக்களாக அரங்கத்தில் வழங்க முடியுமானால் மக்கள் அதை வரவேற்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

இந்த நூல் ஒரு நாள் இரு நாள் அல்ல பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட கடின உழைப்பின் பின்னதாக வெளி வந்திருக்கிறது.

அரங்கத்திற்கு வந்திருக்கும் பேச்சாளர்கள் நன்கு ஆயத்தப்படுத்தி வந்து தத்தமது கடமைகளை செவ்வனே செய்தமையால்தான் இன்றைய நாளை சிறப்போடு நகர்த்த முடிந்தது.

கிலரி கிளிண்டனின் பெயரை ஓர் எடுகோளாக பாவித்து இந்த நூல் எழுதப்பட்டாலும் உண்மையில் இந்த நூலானது 21ம் நூற்றாண்டின் சைபர் யுத்தம் பற்றிய பல்வேறு பரிமாணங்களையும் எடுத்து விளக்குகிறது என்றார் நூலாசிரியர் கி.செ.துரை.

நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றியபோது எழுத்தாளர் திரு. தர்மா தர்மகுலசிங்கம் நாம் அரசியலை பேசுவதில்லை என்று கூறினாலும் நமது வாழ்வு அரசியல் மயப்பட்டதுதான் என்றும் அதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆகவே இந்த நூலை நமக்கு தொடர்பில்லாத நூல் என்று கருதிவிடக்கூடாது. மேலும் கிலரி கிளிண்டன் என்றால் அவருக்கும் எமக்கும் என்ன தொடர்பு.. அதை ஏன் நாம் படிக்க வேண்டுமென்ற கேள்வி முதலில் எம் மனதில் இருந்தது. ஆனால் படித்தபோதுதான் தமிழ் மக்களின் பிரச்சனைகளும் இதில் பின்னியிருக்கக் கண்டோம் என்று பலர் கூறினார்கள்.

இந்த நூல் ஒரு சைபர் யுத்த விவரண நூலாகவும் இருந்தமையால் அது குறித்த பேச்சுக்களும் அதிகம் இடம் பெற்றன. நாம் ஒவ்வொருவரும் முகநூலை தொடும்போதே சைபர் யுத்தத்தின் அபாயக் கரங்களில் நம்மை அறியாமலே மாட்டுப்படுகிறோம். முகநூல் எப்படி நம்மை மூளைச்சலவை செய்கிறது என்பதை பொறியியலாளர் மதுவந்தன் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய தொழிலதிபர் ரவிசங்கர் சுகதேவன் நாம் முகநூலில் ஒரு லைக் போடும் போதே அந்த லைக் விற்பனைப் பொருளாகிவிடுகிறது. பான் கிளப்புக்களை உருவாக்கி அதை எப்படி விற்கிறார்கள் என்பதையும் நாம் நம்மை அறியாமலே எப்படி நாம் விலை போகிறோம் என்பதையும் எளிமையாக விளங்கப்படுத்தினார்.

கிலரி கிளிண்டன் காலத்தில் மட்டுமல்ல கணிதத்தை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் மூன்று தடவைகள் இதுபோன்ற தப்பு நடைபெற்றதென்றும் அத்ருணம் நடைபெற்ற சூழ்ச்சிகளையும் அரசியலாளர் ஹரன் நடராஜா விளக்கினார்.

மேலும் அங்கு பேசிய ஒன்பது பெண்களும் இந்த உலகில் ஒரு பெண் ஒருவர் அதிகாரத்திற்கு வரத் தடையாக உள்ள அடிப்படைகளை விலாவரியாக எடுத்துரைத்தார்கள்.

அத்தருணம் பல்கலைக்கழக மாணவி தர்சிகா சிறீராஜன் கூறும்போது ஆணும் பெண்ணும் ஒரே தரத்தில் கல்விகற்று ஒரே பணியை செய்தாலும் ஆணைவிட பெண்ணுக்கான சம்பளம் குறைவாகவே இருக்கிறது. பெண்கள் உரிமை அதிகம் கொண்ட டென்மார்க்கில் கூட இந்த சமநிலை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்றார்.

ஆகவே கிலரி கிளிண்டன் அதிபராக வந்தால் அவருக்குரிய சம்பள அளவும் ஆண் அதிபர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் சம்பள அளவிற்கு சமமாக இருக்குமா என்பது அவர் கேள்வியின் உட்பொருளாக இருந்தது.

நுட்பமான கணித அறிவும், சைபர் கிரைமுமே ஜனநாயக முடிவுகளை தீர்மானிக்கிறது என்றால் அங்கே மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன வேலை.. நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்.. ஒரு வாக்குச் சீட்டின் பலம் என்ன..? இத்தகைய கேள்விகள் அரங்கில் முன்வைக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் அடிப்படையாகச் சிந்தித்த பின்னரே செல்வா பாண்டியர் இதுபோன்ற ஒரு நூல்களை வெளியிட முற்பட்டதும் அந்த வழியில் விலை மதிப்பற்ற இரண்டு உயிர்கள் பலியானதும் சாதாரண விடயமல்ல.

தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும். அங்கு சாதிகளுக்குள் நிலவும் பிணக்குகளை உயிர்பலி ஏற்படாத வகையில் அறிவியல் ரீதியாக தீர்த்து எதிரிகள் புகுந்து விளையாடாத வகையில் அறிவியல் பாதுகாப்பு வலை ஒன்றைப் போட வேண்டும்.

அதற்கு சர்வதேச அரசியலை ஓர் ஆயுதமாக எடுக்க வேண்டும். நமது இளைஞர்களை சர்வதேச அரசியல் புரிந்தவர்களாக மாற்ற வேண்டும்.

அதற்கு ஓர் ஆவணம் வேண்டும் என்ற செல்வா பாண்டியர் விருப்பிற்கமைய எழுதப்பட்ட நூலே இது என்பதால் அவர் மரணிக்கும் போது எடுத்துச் சென்ற புத்தகங்களில் ஒன்று சபையால் தங்க நூல் என்ற தலைப்பில் போற்றப்பட்டது. இது இந்திய ரூபாய் ஓர் இலட்சத்திற்கு விற்கப்பட்டது. தமிழர் நடுவத்தின் அறிவியல் நூல் வெளியீட்டுக்கு அன்பளிப்பாக இப்பணம் வழங்கப்படும் என்றும் அரங்கில் அறிவிக்கப்பட்டது.

டென்மார்க் தலைநகரில் இருந்து கவிஞர் இணுவையூர் சக்திதாசன் முதற் கொண்டு மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா வரை டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மிகவும் கடினமான உடல் நலத்துடன் அரங்கு வந்த கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவை சபை வாழ்நாள் சாதனையாளர் என்று போற்றிப் புகழ்ந்தது.

இந்த நூல் ஐ.பி.சியில் ஒலிபரப்பான உலக வலத்தில் கி.செ.துரை வாசித்தளித்த செய்திகளின் அடிப்படையில்
எழுதப்பட்டுள்ளது. அவருடைய உலக வலத்தை தவறாது கேட்பவர்களுக்கு இந்த நூல் எளிதாக விளங்கும் என்றும் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் அல்ல முற்று முழதான தமிழ் நூலே. தமிழ் அறிவு கொண்டு, உலகத்தின் இராஜதந்திரம் பகுப்பாய்வு செய்து எழுதப்பட்ட படைப்பாகும். ஆகவே சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் வெளிவரவேண்டும் என்றும் சிறப்பாக பாடப்புத்தகமாக்கப்பட வேண்டுமெனவும் தர்மா தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

இதுவரை காலமும் நாவல், கவிதை, கட்டுரை என்றளவில் இருந்த புலம் பெயர் தமிழர் நூல் வெளியீடானது இப்போது ஒரு இராஜதந்திர நூல் வெளியீடாக மாறியதும், அதை நன்கு விளங்கி பெண்கள் மிகச்சிறப்பாக பேசியதும் தமிழர் சிந்தனை மாற்றம் சரியான தடத்தில்தான் நகர்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

தங்க நூல் ஒன்றை வெளியிட்ட இந்த நாள் ஒரு தங்கமான மாலைப்பொழுதை தந்ததாக பலரும் போற்றி விடைபெற்றனர்.

விழாவின்போது தமிழர் மரபிற்கமைய சிறப்பான விருந்துபசாரமும் இடம் பெற்றது.

தமிழகத்தில் இருந்து தமிழர் நடுவம், தோழர் பாவல் சங்கர், தோழர் இராமநாதன் பாண்டியர், சிங்கப்பூரில் இருந்து நாகேஸ் முத்துபாண்டியர், டென்மார்க்கில் இருந்து ஆசிரியர் திருரவிச்சந்திரன், வீபோ தம்பிப்பிள்ளை செல்லம்மா ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

அலைகள் நிருபர் 11.06.2018

Related posts

Leave a Comment