இரண்டாம் பாகம் : உயிர்வரை இனிக்கிறது யாழ்ப்பாணம்.. பயணக்கட்டுரை அத் 18

மன்னார் தீவு மனதை விட்டு நீங்காத பதிவுகள்..

அடுத்து பேசாலை திரும்பி எனது நண்பரும் பாடசாலை அதிபருமான பெர்ணாண்டோவை பார்த்தாக வேண்டும். சிறிது தாமதித்தாலும் அவர் தேவாலயம் சென்றுவிட வாய்ப்பு இருப்பதாக ஒலிவர் கூறினார்.

தேவாலயம் செல்வதோ வழிபடுவதோ அல்ல அங்கு முக்கியம். வாழ்க்கையை தேவாலயங்கள் இயக்குகின்றனவா இல்லை வாழ்க்கை தேவாலயத்தை இயக்குகிறதா என்பதை பிரித்தறிய முடியாதளவுக்கு அவர்கள் வாழ்வும் தேவாலயமும் கரைந்து கிடப்பதே அங்கு நான் கண்ட முக்கியம்.

இப்படி பலதும் பத்துமாக எண்ணங்கள் கரை புரண்டோட எனது பயணத்தின் தேடலை அசை போட்டபடியே வீதியையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிலிம் ரோல் ஓடுவதுபோல மன்னார் ஓடிக்கொண்டிருந்தது.

இந்தப் பயணத்தொடரை ஆரம்பித்தபோதே ஆட்டோகிராப் திரைப்படத்தில் வரும் பாடசாலை நண்பர்கள் சந்திப்பு போல ஒரு சந்திப்பை உருவாக்கவே காத்திருந்தேன். ஆனால் அதற்கான பதமுடைய ஒருவரைக்கூட என்னால் சந்திக்க முடியவில்லை.

காரணம் டிமென்சியா என்னும் மறதி நோய்.. சிறிதும் பெரிதுமாக அதிகமான மனிதர்களை பற்றியிருந்தது. அதை மறந்து நிஜ வாழ்க்கையை திரைக்கதைக்குள் கொண்டு வந்தது தவறு என்பதை போகப்போகப் புரிந்து கொண்டேன்.

இருந்தாலும் நான் தேடியது வீண்போகவில்லை நண்பன் பெர்ணாண்டோ மறதியற்ற மனிதனாக நின்றான்.

பாடசாலையில் அதிபராக இருந்து ஓய்வு பெற்று இப்போதும் தன்னை சுற்றியுள்ள சமுதாய மேம்பாட்டுக்காகவே பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

வீட்டின் முன்புறம் நமது வாகனம் நிற்கிறது..

கடைசியாக 1981 ம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இருந்து வெளியேறிய பின் இப்பொழுதுதான் மறுபடியும் சந்திப்பதால் தேகத்தில் மெல்லிய படபடப்பு.

நாம் உள்ளே நுழைந்தபோது நுளம்பு வலை ஒன்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்தான் என் நண்பன். மத்தியான நேரத்தின் குட்டித்தூக்கம் அங்கு பிரபலம்.

என்னைக் கண்டதும் சட்டென எழுந்து கட்டித் தழுவிக்கொண்டான். அவன் மனைவி வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல தேநீரும் சிற்றுண்டியும் தயார் செய்ய புறப்பட்டார்.

காட்சிகள் சார்ளி சாப்ளின் திரைப்படங்கள் போல வேகமாக நகர்ந்தன..

பெர்ணாண்டோ கிறீத்தவ சமயத்துடன் தொடர்புபட்ட உடக்கு பாஸ் என்னும் பொம்மலாட்ட நிகழ்ச்சி பாடல்களை பாடுவதிலும், கூத்து கலையை மரபு முறைப்படி ஆடுவதிலும் வல்லவன்.

அக்காலத்தே நாடகப்போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்பதால் என்னை ஒரு நாடகக்காரனாகவே பலருக்கு நினைவில் இருந்தது. ஆனால் நாம் எல்லாமே பெர்ணாண்டோவிற்கு முன் எதுவும் இல்லையென்று கருதும்படியாக கலாசாலையில் அவன் ஆடிய கூத்தாட்ட நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

அவனுடைய வேகம், உடல் அசைவு, தாளக்கட்டு என்று ஒரு பாரம்பரிய கலை வடிவமாகவே அவன் வாழ்ந்திருப்பதை அக்கணம் கண்டு கொண்டேன். அன்று தொடங்கிய நட்பு இன்றுவரை மறக்க முடியாத நட்பாக இருக்கிறது.

அன்றொரு நாள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில்..

எமக்கு முன்னர் பயிற்சியை முடித்த ஆசிரிய மாணவர்கள் கலாசாலையை விட்டு வெளியேறும் பிரியாவிடை நாள் வந்தது.

அவர்களை எல்லாம் பிரியப் போகிறோம் என்ற கவலை மனதை அடைக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையின் பல பாகங்களுக்கும் பிரிந்து போகப்போகிறார்கள்.

ஒரு மரத்தில் கூடிய பறவைகள் இனி மறுபடியும் அந்த மரத்திற்கு திரும்பாத கடைசிப் பெரும் பிரிவு. பிரசவத்தைப் போன்ற ஒரு வலி.. இதை எழுதும்போது கூட அந்த வலியின் விஷம் என்னை துடிக்க வைக்கிறது. அது காலத்தால் வெல்ல முடியாத விஷம்.

அவர்களில் பலரை இனி இந்த உலக வாழ்வில் என்றுமே சந்திக்க முடியாத நிலை வரும் என்பதை நமது கலைத்துவ மனம் புரிந்து துடித்தது. எனவே அவர்கள் பிரிவை மறக்க முடியாத ஒரு பிரியாவிடை மூலம் பதிவு செய்து கொள்ள எண்ணினேன்.

அந்தக் கலாசாலையில் பிரியாவிடை நிகழ்வுகள் முன்னரும் நடந்துள்ளன. இருந்தாலும் இதுவரை நடைபெற்றிராத பிரமாண்டமான நிகழ்வாக நடக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

” இந்த நாளை வந்த நாளில் மறந்து போனோமே
வாழ்க்கை துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே – நாமே
வாழ்ந்து வந்தோமே..”

சிவாஜி கணேசன் நடித்த இரத்தத்திலகம் திரைப்படத்தில் வரும் பிரிந்து செல்லும் பாடசாலை மாணவர்களுக்காக எழுதிய பாடல் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அப்பொழுது நானே கலாசாலையின் தமிழ் மன்றத் தலைவராக இருந்ததால் எனது சக ஆசிரிய தோழர்களை அழைத்து எனது உள்ளத்துக் கனவுகளை விபரித்தேன்.

மிகவும் கடினமான வேலை. கலாசாலையின் ஒரு பக்கத்தில் இருந்த தளவாடங்களை எல்லாம் இன்னொரு மண்டபத்திற்கு நகர்த்த வேண்டும்.

நண்பன் பெர்ணாண்டோவே இதற்கு சரியானவன் என்பதால் அவனிடம் சொன்னேன். எமது சமூகக்கல்விப் பிரிவில் இருந்த மாணவர்கள் அனைவரும் அக்கணமே புது வலு பெற்றோம். யாரும் எதிர்பாரதவிதமாக அதைச் செய்து மண்டபத்தை உருவாக்கியபோது எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்.

பத்துத் தினங்கள் சென்றாலும் முடியாத வேலை ஒரு மாலைப் பொழுதிலேயே முடிந்தது.

நமக்கு எந்த இலாபமும் இல்லாமல், மற்றவர்களை இப்படியெல்லாம் பெருமைப்படுத்த வேண்டுமா.. இது உண்மையா.. பல ஆசிரிய மாணவர்களால் நம்ப முடியவில்லை.

அப்போதுதான் ஒரு கட்டுக்கதை பரவியது. நாங்கள் சாராயம் அடித்துவிட்டே அதை எல்லாம் செய்ததாகவும், இல்லாவிட்டால் அது சாத்தியம் இல்லை என்றும் பேசிச் சிரித்தார்கள்.

சாராயப் போத்தல்களை உடைத்து ஊற்றியது நானே என்று அதிபருக்கும் மொட்டைக்கடதாசி போட்டுவிட்டார்கள்.

சமுதாயம் என்றால் இப்படித்தான். இதையெல்லாம் தாங்கி முறியடிப்பதுதானே ஆசிரியர் பயிற்சி என்பது எமக்கு தெரிந்திருந்தது.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அன்றைய அதிபர் திருமதி ஆனந்தக்குமாரசாமி மிகவும் கண்டிப்பானவர். சினிமா பாடல்கள் பாடுவதற்குக்கூட கடுமையான தடை போட்டிருந்தார்.

ஏற்கெனவே புரட்சிகரமான சிந்தனைகளைப் பேசினால் தலவாக்கொல்லை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்கு இடமாற்றம் செய்ய நேரிடும் என்ற எச்சரிக்கை எனக்கு மட்டும் அதிபரால் விடுக்கப்பட்டிருந்தது, அந்த இரகசியம் பலருக்கு தெரியாது.

ஆனாலும் எனது தனிப்பட்ட பொறுப்பில்..

” பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே..
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பிரிந்து செல்கின்றோம் ..”

என்ற பாடலை சங்கீதப்பிரிவு மாணவிகளை வைத்து பாடச்செய்தேன். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அதிபரும் என்னை அழைத்து எதற்காக சினிமா பாடலை பாடினீர்கள் என்று கேட்கவே இல்லை.

அன்றைய நிகழ்வை பாராட்டாதவர்களே இல்லை.

” இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் இன்னொருவன் இதை கற்பனை செய்யக் கூடாது மச்சான் ” என்று கூறி என்னோடு கைகோர்த்து நின்ற துணிச்சல் மிக்க வீரன்தான் இந்தப் பெர்ணாண்டோ.

அந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் கற்றுக் கொண்ட முக்கிய பாடமும் பரிசும் என்ன தெரியுமா..?

மொட்டைக்கடதாசி போடுவோர், கறைபூசுவோர் போன்ற சமுதாய புல்லுருவிகளை வெல்ல ஒரே வழி நாம் இடையறாது செயற்படுவதுதான்.

வாழ்க்கையில் நொடிப் பொழுதுகளைக்கூட கோட்டை விடல் கூடாது. மொட்டைக்கடதாசி போடுவோர் தமது வாழ்க்கையின் செயற்பாட்டு நேரத்தை இழப்பார்கள். இறுதியில் தோற்றுப் போவார்கள்.

அன்று கலாசாலையில் மொட்டைக்கடதாசி போட்டு, பொய் செய்திகளை பரப்பிய ஆசிரிய மாணவர்கள் அனைவரையும் வாழ்க்கை என்னும் பெரும் காட்டாறு அடித்துப் போய்விட்டதை இப்போது நிதர்சனமாகக் காண்கிறேன்.

நமது செயல்கள் சரியாக இருந்தால் மொட்டைக்கடதாசிகளை தோற்கடிக்கலாம் என்பதுதான் நாம் கலாசாலையில் கற்ற மிகப்பெரிய கல்வியாகும்.

இப்படி அன்றே என்னுடன் தோள் கொடுத்து நின்று போராடிய தோழனை பார்ப்பது மனதில் ஒரு வித இன்பக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

போர்க்கால வாழ்வில் மன்னாரும் பாதிப்படையத் தவறவில்லை ஆனால் மன்னாரில் மற்றைய இடங்களைப் போல காட்டிக் கொடுக்கும் பழக்கம் பெரியளவில் இருக்கவில்லை. மக்கள் மீதான நம்பிக்கையும் உறவும் இன்றும் ஆரோக்கியமாவே இருப்பதாகச் சொன்னான்.

ஒரு பாடசாலை அதிபர் எப்படி தனது மாணவர்களை காப்பாற்றும் தாய் போல செயற்படுவாரோ அது போன்ற அவதானத்துடன் அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வெளி வந்தது எனக்கு பெருமை தந்தது.

ஒட்டு மொத்த மன்னாரின் இன்றைய நிலை பற்றியும் அவன் விளங்கப்படுத்தினான். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்தில் இருந்தவர்கள் நம்மை பைத்தியங்கள் என்று முடிவெடுத்து ஒருவித மௌனம் காப்பது போலவும் இருந்தது.

கலாசாலை வாழ்வு தேடித்தந்த நண்பர்களில் நடந்தவைகளை எல்லாம் மறந்து போகாத ஒருவனாக பெர்ணாண்டோவைக் கண்டேன்.

அப்போது அவன் சொன்ன வாசகம் ஒன்று எனது மனதிற்கு மிகவும் மகிழ்வு தந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையை நினைக்கும் போதெல்லாம் எனது முகமே தன் நினைவுக்கு வருவதாகக் கூறினான்.

தேநீர் அருந்திவிட்டு நிமிர்ந்தேன்..

அவன் தேவாலயத்திற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவனுடைய மனைவியார் தான் போய் ஆரம்பப் பணிகளை செய்வதாகவும், அவனை என்னுடன் பேசும்படி கூறிவிட்டு தான் விடை பெற்றார்.

நாம் மற்றவர்களை அருகில் வைத்துக் கொண்டு கடந்த காலத்தை அதிக நேரம் பேச முடியாது. அதற்கும் ஓர் அளவு இருக்கிறதல்லவா.. நிறுத்திக் கொண்டோம்.

மறுபடியும் மன்னார் வந்து நண்பன் பெர்ணாண்டோ வீட்டில் ஒரு வாரம் இருப்பதாக கூறிவிட்டு வெளியில் கிடந்த செருப்பை மாட்டுகிறேன்.

பெர்ணாண்டோ என் பாதங்களையே கூர்ந்து பார்க்கிறான்..

அப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது..

அன்று நமது கலாசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி. மாணவர்களில் பலரிடம் அணிவகுப்பிற்கான வெள்ளை நிற சப்பாத்துக்கள் இல்லை. அதை நானே பல இடங்களில் தேடி வந்து கொடுத்திருந்தேன்.

ஆனாலும் அணிவகுப்பில் நமது இல்லம் தோற்றுவிட்டது.

ஏன் தோற்றது..

கதை பரவியது.. சப்பாத்து இல்லாமல் நானே வந்ததாகவும். பாடசாலை வெண்கட்டியை இடித்து மாவாக்கி, நீரில் குழைத்து பாதங்களில் பூசி, சப்பாத்து போட்டது போல நடந்து ஏமாற்றியதாகவும். தோல்விக்கு அதுவே காரணமென்றும் கதை உலாப்போனது.

சப்பாத்துக்களை தேடிக் கொடுத்த எனக்கு வந்த பழி இது. நமது இல்ல ஆசிரியர் என்னை அழைத்து திட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் நடந்தது அதுவல்ல வெற்றி பெற்ற அணியில் இன்னொரு செல்லத்துரை இருந்தார். அவர் சங்கீத மாணவர். அவர் பூசிய சுண்ணாம்பு வேலை செல்லத்துரை என்ற பெயர் இருப்பதால் என்னை பிடித்துக் கொண்டது.

இருந்தாலும் பாதங்களில் சுண்ணாம்பு பூசி வெற்றியாளனாகிய சங்கீத மாணவன் அச்சுவேலி செல்லத்துரையை நான் இன்றுவரை மறக்கவில்லை.

சப்பாத்து இல்லாத நாம் பாதங்களில் சப்பாத்தை படமாக வரைந்து நடை பயில முடியும் என்பதே ஒரு வெற்றிக் கற்பனையல்வா.. வாழ்க அந்த சிந்தனையாளன்.

” நான் கால்களுக்கு வெள்ளை பூசி வரவில்லை என்றேன். ”

” இல்லை அடுத்த பாதணி பாதுகை .!! ” என்றான்..

“அடடா அதுவா.. ஆகா.. ஆனந்தம் இந்த இடத்தில் அது எத்தனை பொருத்தமான நிறைவை தருகிறது..”

வாழ்க்கையே சம்பவங்கள் என்ற மணிகளால் கோர்க்கப்பட்ட மாலைதானே..?

அன்றைய தினம் கலாசாலை நாடகப் போட்டியில் பரதனாக நடித்திருந்தேன். கானகம் சென்ற இராமனின் பாதணியை தலையில் ஏந்தி கண்ணீர் மல்க விடை பெறுவதுதான் அந்த நாடகத்தின் நிறைவுக் காட்சி.

அண்ணனான ராமன் மறுபடியும் அயோத்தி வரும்வரை அவனுடைய பாதணிகளான பாதுகைகளே சிம்மாசனத்தில் இருந்து நாட்டை ஆளும் என்று கூறி அதனுடன் விடைபெறுகிறான் பரதன். இராமனையும் சீதையையும், இலட்சுமணனையும் மூன்று தடவைகள் சுற்றுகிறேன்,

இசைப்புலவர் நவரத்தினம் அப்போது பின்னணிப் பாடலை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார்..

அன்றைய நாடகத்தில் என் கண்களில் உண்மையாகவே நீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது.

எங்கள் ராமன் வருவானா…?

வருவான்.. அவன் பாதணிகளுடன் விடை பெறுகிறேன்..

” பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்.
நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலைத்திடவே எங்கள் மனக்குறை மாற்றவே
பாதுகையே துணையாகும்…
எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்…”

பாடல் காற்றோடு கரைகிறது..

மேடையை விட்டு வெளியேறுகிறேன்.. கரகோஷம் வானைப் பிளக்கிறது..

அன்று மட்டுமா இன்றும் அதுதான் நிலை..

நான் இப்போதும் பாதுகை சுமந்த பரதன் போலவே ராமன் கால் பதித்த அந்த மன்னாரை விட்டு விடைபெறுகிறேன்…

எங்கள் ராமன் வருவான்.. மறுபடியும் இந்தப் பாதணிகளை அவனுக்கு வழங்குவேன்.. அவன் முடிசூடுவான்.. இங்கு மறுபடியும் ராமராட்சியம் மலரும் என்ற பரதனின் நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்..

உயிர்வரை இனிக்கிறது அந்தப் பயணம்..

பரதன் கங்கை நதி கடந்து திரும்பியது போன்ற பயணம் அது..

” கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின்மணி சீதை
தானும் தொடர்ந்தாள்..”

வாகனம் ஓடிக்கொண்டிருக்கிறது..

மெல்ல மெல்ல காட்சிகள் மறைந்து அவை தூரத்து ஓவியங்களாகின்றன..

காலத்தின் பெரும் காற்று வீசிக்கொண்டிருக்கிறது..

” ராமா ராகவா.. எனதருமை
ராமா ராகவா..!!”
தம்பி பரதனின் குரல் காற்றில் தவழ்ந்து ராமனின் காதுகளில் விழுகிறது..

கி.செ.துரை 09.05.2018

நிறைவு…

Related posts

Leave a Comment