அலைகள் வாராந்தப் பழமொழிகள் 21.05.2018 திங்கள்

கும்பல் கலாச்சாரம் மனிதனை கூண்டோடு அழிக்கும்..

01. கூட்டத்தின் நடுவே இருக்கும் மனிதனின் மனம் வினோதமான ஆதி மனிதனுடைய மனம் போல மாறிவிடுகிறது. ஆராய்ந்து பார்க்க முடியாதபடி அவனுடைய அறிவும் கூட்டத்தில் இருப்பதால் கூட்டத்தோடு கூட்டமாக முனை மழுங்கிவிடுகிறது.

02. ஜனங்களுடன் ஜனங்களாக இருக்கும் போது மனிதன் சிதறிக்கிடக்கும் மணல் துணிக்கைகளில் ஒன்றாகிவிடுகிறான். காற்று அவனை இலகுவாக தூக்கி சென்றுவிடுகிறது. இப்படித்தான் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்.

03. எல்லோருடைய மனங்களும் ஒன்று சேரும்போது அது ஒற்றை மனம்போல மாறிவிடுகிறது. மனிதனை கட்டுப்படுத்த விரும்பினால் அவனை கூட்டத்தோடு கூட்டமாக வைத்திருந்தால் எளிதாக கட்டுப்படுத்தி தவறான கொள்கையை சரியென ஏற்கச் செய்துவிடலாம்.

04. கூட்டத்தோடு சேரும்போது ஜனங்கள் சிரமம் தராத ஒரு மாய லோகத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த இடத்தில் ஒரு தனி மனிதன் தனது சுயத்தை இழந்து அதற்குள் கரைந்தும் போய்விடுகிறான்.

05. அத்தருணம் கூட்டத்தில் இருக்கும் மனிதனுடைய பகுத்தறிவு, மன உறுதி, பகுத்துணரும் புத்தி, சுய சிந்தனை போன்றன தொலைந்து போய்விடுகின்றன.

06. மனிதர்களை கட்டுப்படுத்த விரும்பும் ஒருவர் பெரிய கூட்டத்தினிடையே அதை இலகுவாக செய்துவிடலாமென்பதை புரிந்து வைத்துள்ளார். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து வண்டியோட்டுகிறார்கள்.

07. உயிர்த்தெழுதல், எழுப்புதல் கூட்டங்கள் என்ற மத ரீதியான சடங்குகள் எல்லாம் ஆன்மீகத்தைவிடவும் உடல் சார்ந்த விடயங்களே என்று இன்றைய மனோதத்துவ ஆய்வு கூறுகிறது.

08. கும்பலின் ஓர் அங்கமாக மனிதன் மாறும்போது சமூகப்பண்பு என்ற தனது ஏணியில் இருந்து பல படிகள் கீழே இறங்கிவிடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். கூட்டத்தின் நடுவே உணர்ச்சி வசப்பட்டு காட்டு மிராண்டியாக மாறுகிறான்.

09. கூட்டத்தில் இருப்போர் காரண காரியங்களைவிட உணர்ச்சியின் பிடியில்தான் சிக்குண்டு கிடப்பார்கள். மதக்கூட்டங்களில் பிரச்சனைக்கு தீர்வு காட்டுவதே முக்கிய பணியாக இருப்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

10. கூட்டத்தில் சொல்லப்படும் ஒரு விடயத்தை பெரிய விடயம் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். அந்த எண்ண அலைகளின் தாக்கம் அங்கு நிற்கும் சாதாரண மனிதனின் எண்ணங்களையும் கவ்விக் கொள்கிறது.

11. ஒரு சராசரி மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டத்தினால் பலவந்தப்படுத்தப்படுகிறான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பெரும் மடையர்கள் என்று தெரிந்தாலும் அவர்களுடைய உடல் அசைவுக்கு ஏற்ப இவனும் ஆடத் தொடங்குகிறான். இதனால் அவன் கும்பலில் ஒருவனாகிறான்.

12. மனித மனம் குழப்பம், பயம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செம்மறியாட்டுக்கு சமமான நிலையில் மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் கும்பலோடு கும்பலாக ஆடு மாடுகளும், குதிரைகளும் முண்டியடித்து ஓடுவது போல மனிதனும் ஓடத் தொடங்குகிறான்.

13. பெரும்பாலான கூட்டங்களில் பேசுவோர் ஆச்சர்யத்தையும் திகைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியே செயற்படுகிறார்கள். அதற்கு தகுந்த சொற்களை தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள்.

14. அனைத்து வகையான மதப் போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் வெற்றி தரும் புள்ளி எது தெரியுமா.. மனிதனின் உணர்ச்சி உச்சத்தை எட்டிவிடும் பைத்தியக்கார நிலைதான்.

15. சலிப்பூட்டும் சொற்பொழிவுகளில் மனித உணர்வுகள் சோர்வடைகின்றன. கடைசியாக பிரேரணைகள் எடுத்து வீசப்படுகின்றன. அவை ஹிப்னாட்டிசம் கலந்தவை என்பது மனோதத்துவம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

16. உயிர்த்தெழ செய்யும் நிகழ்ச்சிகளை நடத்துவோரும் இது போன்ற தொனியிலேயே பேசுவார்கள். இதே கருத்தை கொண்டிருப்போர் எல்லாம் எழுந்து நில்லுங்கள் என்பார்கள். நன்மையடைய விரும்புவோர் எல்லாம் எழுந்து நில்லுங்கள் என்பார்கள்.

17. ஆர்வம் பெற்றவர்கள் அந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படிவார்கள். இதோ எழுந்து வாருங்கள், இந்தப் பக்கம் வாருங்கள், நான் சொல்கிறேன் வாருங்கள் என்று கூறுவார்கள் இதில் சிக்குப்பட்டவர் நிலை அதோகதிதான். அரசியல், மதம் அனைத்திற்கும் இது பொருந்தும்.

18. ஒவ்வொரு எழுப்புதல் மத போதகரும் ஒரு ஹிப்னாட்டிசவாதிதான். எந்தவொரு ஹிப்னாட்டிசம் தெரிந்தவரும் இது போல மதவாதியாக மாற முடியும்.

19. மதவாதிகள் சொல்லும் தாய்மை, குடும்ப உறவு, சொர்க்கம் பற்றிய செய்திகள் எதிர்ப்பை குறைத்து உணர்ச்சியை தட்டி எழுப்புகின்றன. அதேவேளை மரணம் பற்றிய பீதியையும் கிளப்புவார்கள். அவர்களுக்கு வேண்டியது கும்பலை வசியப்படுத்துவதே.

20. அனைத்தையும் இறைவனிடம் விட்டுவிடுங்கள் இப்போது இந்த விநாடியே உங்களை முழுமையாக ஆண்டவனிடம் ஒப்படைத்துவிடுங்கள் அல்லது இப்போதே நம்பிக்கை கொள்ளுங்கள் ரட்சிக்கப்படுவீர்கள், உங்களை இயேசுவிடம் ஒப்படைக்க தயாரா என்றெல்லாம் கேட்பார்கள். இந்த மனோநிலை நிலையானதல்ல பின்னர் இது சுருங்கிவிடும்.

21. உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களுக்கு மதவாதிகள் செய்ய நினைப்பது ஒரு தற்காலிகமான மன உணர்வுதான்.

22. மனிதர்களாகிய நாம் கற்காலம் தொடங்கி விஞ்ஞான ஆய்வுக்காலத்தை கடந்து வந்துள்ளோம். இப்போது நாம் வாழும் காலம் எண்ணங்களின் காலம். வயிற்றுக்கு சோறு என்ற காலம் முடிந்துவிட்டதை நாம் புரிய வேண்டும். வெற்றிகர எண்ணங்களை நாமே உருவாக்க வேண்டும்.

23. மனிதனின் மூளை ஓர் ஒலிபரப்பு நிலையமாகவும் ஒலி அலைகளை கிரகித்துக் கொள்ளும் நிலையமாகவும் இருக்கிறதென்பதை மறந்துவிடக்கூடாது. விலங்கு நிலையில் இருந்தபோது அறிவாற்றல் குறைந்து போராட்டமே வாழ்வாக இருந்ததையும் இங்கு அவதானிக்க வேண்டும்.

24. தாமஸ் அல்வா எடிசன் மனோபலத்தால் இயற்கை சக்தியை அடக்கியாண்டு அதை மனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்தினார். இவரும் கும்பலில் ஒருவராக சேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் கோஷம் போட்டு மடிந்திருப்பார் அவ்வளவுதான்.

25. ஏசுநாதர் மாஸ்டர் மைன்ட் என்ற சூத்திரத்தை அறிந்திருந்தார். தனது பன்னிரண்டு சீடர்களுடன் இணைந்து உலகின் முதல் 13 நபர் குழுவை உருவாக்கினார். யூதாஸ் காட்டிக் கொடுக்கும்வரை அது சக்தி மிக்க மாஸ்டர் மைன்ட் ஆகவே இருந்தது.

பழமொழிகள் தொடர்ந்தும் வரும்

அலைகள் 29.05.2018

Related posts

Leave a Comment